இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, “ தாமரை எங்கேயாவது மலர்ந்தால்தானே டென்ஷன் ஆவதற்கு. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூண்டோடு ஏறக்கட்டிவிட்டோம். அப்புறம் எதற்கு நாங்கள் டென்சன் ஆக வேண்டும். அவர்களுக்கு எங்களைப் பார்த்துதான் டென்சன்.
எட்டுகால் பாய்ச்சலில் தேர்தல் பணிகள்:
தி.மு.க. தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டோம். நாலுகால் பாய்ச்சலில் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய இந்த இயக்கம் தற்போது எட்டுகால் பாய்ச்சலில் பாயத் தயாராகிவிட்டது. முதல்வர் ஒருபுறம், துணை முதல்வர் மறுபுறம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் குறைகளை நேரடியாக சென்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
முதலமைச்சர் சட்டமன்ற தேர்தலில் 200 என்றார். நிச்சயம் 234 என்ற இலக்கை நோக்கி தி.மு.க. பயணித்துக் கொண்டிருக்கிறது. டென்சன் என்பது எங்களுக்கு இல்லை. எங்களை எதிர்த்து பயணித்துக் கொண்டு இருப்பவர்களுக்குத்தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கனகசபை பிரச்சினை:
நீதிக்குத் தலைவணங்கும் ஆட்சிதான் முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி. திருக்கோவிலைப் பொறுத்தவரை இந்து சமய அறநிலையத்துறை சட்டங்கள் என்ன சொல்கிறது என்றால், எந்த கோயிலாக இருந்தாலும் அங்கிருந்து புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுத்து முழு அதிகாரம் உண்டு.
கனகசபை மீது ஏறிய மக்களைத் தடுத்து நிறுத்திய காரணமாகத்தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு, ஒரு அரசாணையை பிறப்பிக்க வேண்டியிருந்தது. அந்த அரசாணையை எதிர்த்து ஏற்கனவே நீதிமன்றம் சென்றபோது, நீதிமன்றம் கனகசபை மீது பக்தர்கள் ஏறுவதை தடை செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
அரசு தலையிடும்:
அதைத்தொடர்ந்து கடந்தாண்டு பக்தர்கள் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது நீதிமன்றம் கூறியதை எடுத்துக்கொண்டு நிச்சயமாக தீட்சிதர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை போராட வேண்டிய அவசியம் இல்லை. பக்தர்களின் நலன் காக்கும் அரசு, பக்தர்களும் நம்முடைய பிரஜைகள். இந்நாட்டு மன்னர்கள்தான்.
அவர்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத சூழலில் நிச்சயம் அரசு தலையிடும். அதை நீதிமன்றமும் வரவேற்கும். கோயில் என்பது பக்தர்கள் தரிசனத்திற்காகத்தான். குறிப்பிட்ட மக்கள், குறிப்பிட்ட தீட்சிதர்கள் தரிசனம் செய்வதற்காக அல்ல. பொதுமக்களுக்கு கேடு விளைவிக்குமென்றால் மக்களின் தரிசனத்தின் இடையூறு ஏற்பட்டால் நிச்சயம் இந்து சமய அறநிலைததுறை தலையிடும். நீதிமன்ற வழிகாட்டுதல் படி செயல்படுவோம். நீதிமன்றத்தில் தமிழக அரசு வெல்லும்.
அனைத்து திருக்கோயிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அன்னைத் தமிழ் அர்ச்சனை, அன்னைத் தமிழ் குடமுழுக்கு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பல உதாரணங்கள் இருக்கிறது.”
இவ்வாறு அவர் பேசினார்.