வழக்கமான பேனா- காகித முறையில் அல்லாமல், ஆன்லைன் எனப்படும் கணினி முறையில் நீட் தேர்வை நடத்தலாமா என்று ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு வழக்கம்போல ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதேபோல நீட் தேர்வை வழக்கமான பேனா- காகித முறையில் நடத்தலாமா அல்லது ஆன்லைன் முறையில் (CBT) நீட் தேர்வை நடத்தலாமா என்று சுகாதாரத் துறை அமைச்சகத்துடன் ஆலோசனை செய்யப்பட்டது.


அரசு வருங்காலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்துப் பரிசீலித்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.


தேசியத் தேர்வுகள் முகமையிலும் அதிரடி மாற்றம்


என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை இனி உயர் கல்வி சார்ந்த நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும் என்றும் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’தேசியத் தேர்வுகள் முகமை இனி உயர் கல்வி சார்ந்த நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும். அடுத்த ஆண்டில் இருந்து வேறு எந்த ஆட்சேர்க்கைக்கான தேர்வுகளையும் நடத்தாது. 2025ஆம் ஆண்டில் இருந்து இந்த முறை அமலுக்கு வரும்.



தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.


முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவா?



ஏற்கெனவே என்டிஏ நடத்திய நீட், ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் வெளியாகின. இந்த நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதையும் வாசிக்கலாம்: LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?