அட்லீ 


ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அட்லீ. தொடர்ந்து தெறி , மெர்சல் , பிகில் என விஜயுடன் அடுத்தடுத்து ப்ளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த அட்லீ அப்படியே பாலிவுட் பக்கம் திரும்பினார். ஷாருக் கான் நடித்த ஜவான் திரைப்படத்தை இயக்கி பாலிவுட் பாக்ஸ் ஆபிஸை ஆட்டம் காண செய்தார். அட்லீயின் படங்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும்  இந்திய சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுகிறார் அட்லீ. தற்போது இந்தியில் வருன் தவான் நடித்துள்ள தெறி படத்தின் ரீமேக் பேபி ஜான் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்க இருக்கிறார். 


அட்லி அடுத்த படம் அப்டேட்


ஜவான் படத்திற்கு பின் அட்லீயின் அடுத்த படத்தைப் பற்றிய பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் அல்லு அர்ஜூன் படத்தை அட்லீ இயக்கவிருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. பின் இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மீண்டும் இந்தியில் சல்மான் கான் படத்தை அட்லீ இயக்கவிருக்கிறார் என்கிற தகவலும் வெளியானது. ஆனால் இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை. நிகழ்ச்சி ஒன்றில் அட்லீ தனது அடுத்த படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான அட்பேட் கொடுத்துள்ளார். 


இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் 


" என்னுடைய அடுத்த படம் நிறைய நேரமும் உழைப்பும் தேவைப்படும் ஒரு படம். இந்த படத்திற்கான திரைக்கதை பணிகள் முடிவடைந்துவிட்டன. தற்போது அடுத்தகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. கூடிய விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு வெளியாகும். நிச்சயமாக நான் உங்கள் எல்லாரையும் சர்ப்ரைஸ் செய்வேன். யாரும் எதிர்பார்க்காத நடிகர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த நாட்டிற்கே பெருமை சேர்க்கும் படமாக இந்த படம் இருக்கும். உழைப்பு தவிர்த்து உங்கள் எல்லாரது ஆசீர்வாதமும் எங்களுக்கு தேவை படுகிறது. அதனால் நீங்கள் எல்லாரும் எங்களை வாழ்த்த வேண்டும். கூடிய விரைவில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகும் " என அட்லீ தெரிவித்துள்ளார்