மருத்துவம், பொறியியல், பட்டப் படிப்பு என அனைத்து துறை மாணவர்களுக்கும் உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக எல்ஐசி அறிவித்துள்ளது. எல்ஐசி பொன்விழா கல்வி உதவித் தொகை திட்டம் 2024-ன் கீழ், மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ அல்லது அதற்கு சமமான சிஜிபிஏ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024-25 கல்வியாண்டில் மருத்துவம், பொறியியல், அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பில் முதல் ஆண்டு இணைந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
அதேபோல், தொழிற்கல்வி படிப்பில் சேரும் மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், 10-ம் வகுப்பு முடித்து 11, 12-ம் வகுப்பு, 2 ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரும் பெண் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 2021- 22/ 2022-23/ 2023-24 கல்வியாண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
பொதுப் பிரிவில் அனைத்து மாணவர்களுக்கும் படித்து முடிக்கும் வரை உதவித்தொகை அளிக்கப்படும். சிறப்புப் பிரிவில் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
உதவித்தொகை எவ்வளவு?
மருத்துவம் சார் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரமும் பொறியியல் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமும் பிற படிப்புகளுக்கு, ஆண்டுக்கு ரூ.20 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படும். எனினும் உதவித்தொகையைப் பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
சிபிஎஸ்இ அல்லது பிற கிரேடிங் முறையில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், சதவீதத்துக்கு மாற்றி விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
விண்ணப்பிப்பது எப்படி?
- உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், https://gjss.licindia.in/GJSS/?_ga=2.42593701.1805045280.1734328831-1027680808.1732013367 என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில் எல்ஐசி நிறுவனம் கேட்டுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில்களை நிரப்ப வேண்டும்.
- ஒரு கேள்விக்கு பதில் அளிக்காவிட்டால்கூட, விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் படாது.
- ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க டிசம்பர் 22-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
- உதவித்தொகை குறித்த விரிவான தகவல்களை https://licindia.in/documents/d/guest/golden-jubilee-scholarship-scheme-2024 என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://licindia.in