பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்விக்காச் செல்லும் ஒவ்வொரு மாணவரும் பெற்றோரும் யோசிப்பதில் தலையாய ஒன்று, கல்லூரி முக்கியமா, துறையா என்பதுதான்..
பெரும்பாலானவர்கள் கற்கும் துறைதான் முக்கியம் என்று கூறும் நிலையில், கற்பிக்கும் கல்லூரியும் முக்கியம் என்கிறார் ஆண்டுக்கு 55 லட்ச ரூபாய் ஊதியத்தில் பிளேஸ் ஆகியிருக்கும் பொறியியல் பட்டதாரி.
ஐஐடி பிலாய்க்கு நோ, ஐஐடி சென்னைக்கு யெஸ்!
ரெட்டிட் தளத்தில் அந்த பயனர் வெளியிட்டுள்ள பதிவில், ’’ஐஐடி பிலாய் கல்லூரியில் அதிகம் பேர் தேர்வு செய்ய விரும்பும் கணினி அறிவியல் துறையை தவிர்த்துவிட்டு, ஐஐடி சென்னையில் முக்கியத்துவம் குறைந்த ஒரு துறையைத் தேர்வு செய்தேன். இதற்குப் பிறகு ஆண்டுக்கு ரூ.55 லட்சம் மதிப்பில் ஊதியம் பெறும் வேலை கிடைத்தது.
குறிப்பிட்ட துறை சார் படிப்பைத் தேர்வு செய்து படிப்பதைவிட, பாரம்பரிய ஐஐடியில் படித்து கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பெறுவது சிறந்தது என்று நினைக்கிறேன். பாரம்பரிய ஐஐடியில் பெறும் பட்டம், வெறும் பட்டம் மட்டுமல்ல. அதுவோர் அழைப்பு’’ என்று தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை
இதுதொடர்பான பதிவு இணையத்தில் வைரலான நிலையில், இதற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஒரு பதிவர் கூறும்போது, ’’என்னுடைய நண்பர் பாரம்பரியம் அல்லாத ஐஐடியில் கணினி அறிவியல் படித்துவிட்டு 1 கோடி ரூபாய் ஆண்டு ஊதியத்தில் தேர்வாகி உள்ளார்.
இதற்கு எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை. நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் அல்லது வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் இது அமைகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு ரெட்டிட் பதிவர் கூறும்போது, ’’பழைய ஐஐடிக்கள் எப்போதுமே வெற்றிகரமானவையே’’ என்று கூறி உள்ளார். அதே நேரத்தில் ஐஐடி மும்பை முன்னாள் மாணவர் ஒருவர் கூறும்போது, ’’துறையோ அல்லது கல்லூரியோ முக்கியமில்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியம்’’ என்று தெரிவித்துள்ளார்.
அதுவும் உண்மைதானே.