சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்‌ புகாரின்‌ மீது உடனடி நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்று பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர்‌. பிரகாஷ்‌ தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’சென்னை அண்ணா பல்கலைக்கழக, கிண்டி பொறியியல்‌ கல்லூரியில்‌ பயிலும்‌ மாணவி ஒருவர்‌, ராஜா அண்ணாமலைபுரம்‌ அனைத்து மகளிர்‌ காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ ஒன்றை அளித்துள்ளார்‌.

Continues below advertisement

மேற்படி புகாரில்‌, மாணவி தனது ஆண்‌ நண்பருடன்‌ கல்லூரி வளாகத்தின்‌ பின்புறம்‌ பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம்‌ தெரியாத நபர்கள்‌ இருவரையும்‌ அச்சுறுத்தியதாகவும்‌ பின்னர்‌ அதே நபர்கள் தன்னுடைய நண்பரைத் தாக்கிவிட்டு தன்னை பாலியல்‌ சீண்டலுக்கு முயன்றதாக மாணவி காவல்‌ நிலையத்தில்‌ 24.12.2024 அன்று புகார்‌ தெரிவித்துள்ளார்‌.

காவல்துறை தீவிர விசாரணை

இந்த புகாரின்‌ பேரில்‌ காவல்துறையினர்‌ உரிய வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்‌. கோட்டூர்புரம்‌ காவல்‌ நிலைய உதவி ஆணையர்‌ தலைமையில்‌, ஆர்‌.ஏ.புரம்‌ மகளிர்‌ காவல்‌ நிலையக்‌ குழுவினருடன்‌ வழக்கை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்‌.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள்‌ புகார்க்‌ குழுவினருக்கும்‌ தற்போது தகவல்‌ தெரிவிக்கப்பட்டு, குழுவின்‌ விசாரணை மேற்கொள்ளப்பட்‌டு வருகிறது.

காவல் துறையினரின்‌ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌ என்று உயர் கல்வித்துறை உயர்‌ அலுவலர்கள்‌ அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்‌. அதன் அடிப்படையில்‌ பல்கலைக்கழக நிர்வாகம்‌ காவல் துறையினரின்‌ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில்‌ பாதுகாப்பு பணியாளர்கள்‌ எப்போதும்‌ பணியில்‌ ஈடுபட்டுள்ளனர்‌. கண்காணிப்பு கேமராக்களும்‌ பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும்‌, இந்த விரும்பத்தகாத சம்பவம்‌ நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம்‌ மீண்டும்‌ நிகழாமல்‌ இருக்க பல்கலைக்கழக அளவில்‌ மேற்கொள்ள வேண்டிய கூடுதல்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌.

மாணவர்களின்‌ பாதுகாப்பே முன்னுரிமை

அண்ணா பல்கலைக்கழகத்தினைப்‌ பொறுத்தவரை அனைத்து மாணவர்களின்‌ பாதுகாப்பு எப்போதுமே முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்‌. குற்றவாளிகளை விரைவில்‌ கண்டறிந்து கைது செய்ய அனைத்து முயற்சிகளும்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அலுவலர்கள்‌ உறுதியளித்துள்ளனர்‌’’.

இவ்வாறு சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்‌.

இதையும் வாசிக்கலாம்: தமிழ்நாட்டிலும் நிர்பயா? தலைநகரின் பெருமைமிகு அண்ணா பல்கலை.யில் பாலியல் அவலம்- கொந்தளித்த ஈபிஎஸ்!