ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக டெல்லி முதலமைச்சர் அதிஷியை கைது செய்ய பாஜக திட்டமிட்டு வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தொடங்கி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் என அடுத்தடுத்து அதிரடி கைது நடந்தது.



விரைவில் கைதாகும் அதிஷி!


இறுதியாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 6 மாத சட்ட போராட்டத்திற்கு பிறகு, சஞ்சய் சிங்குக்கு சமீபத்தில் பிணை கிடைத்தது. பின்னர், மணீஷ் சிசோடியாவுக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஜாமீன் கிடைத்தது.


இந்த நிலையில், டெல்லி முதல்வர் அதிஷியை கைது செய்ய வேண்டும் என மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி மக்களை சிரமப்படுத்த பாஜக சதி செய்து வருகிறது. துணைநிலை ஆளுநர் மூலம் டெல்லி அரசின் பணிகளை நிறுத்தினர். ஆனாலும், டெல்லி அரசு தொடர்ந்து செயல்பட்டு வந்தது.


கெஜ்ரிவால் என்ன சொன்னார்?


இந்த சதிகள் அனைத்தும் தோல்வியடைந்தபோது, ​​ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை சிறைக்கு அனுப்பத் தொடங்கினர். இன்னும் அந்த வேலை நிற்கவில்லை. பாஜக இப்போது தலையிடுவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வரலாற்று தோல்விக்கு பாஜக தயாராகி வருகின்றனர். அவர்களிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை.


இந்த 10 ஆண்டுகளில் ஒரு சாலையோ, மருத்துவமனையோ, பள்ளியோ, கல்லூரியோ அமைக்கவில்லை. டெல்லி மக்கள் அவர்களுக்கு ஒரு வேலையை மட்டுமே கொடுத்தனர்: சட்டம் மற்றும் ஒழுங்கு. அதையும் அழித்துவிட்டார்கள்.


மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். இவர்களுக்கு வாக்களித்தால் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. கெஜ்ரிவாலை தவறாக பேசி ஓட்டு கேட்கின்றனர். அவர்களுக்கு முதலமைச்சர் முகமோ, என்ன செய்ய வேண்டும் இல்லை" என்றார்.