பள்ளிகளில் பாத பூஜை என்ற பெயரில் எந்த நிகழ்வும் மேற்கொள்ளக்கூடாது என்று முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளார்.
பாரம்பரிய வழக்கப்படி, மகன்களும் மகள்களும் தங்களின் பெற்றோருக்கு திருமணத்தின்போது பாத பூஜை செய்வது வழக்கம். இதன்படி, தாய், தந்தையரின் கால்களில் நீர் ஊற்றிக் கழுவி, பூக்களைத் தூவி, திருநீறு, குங்குமம் பூசி வழிபாடு செய்வர்.
ஆசிரியர்களுக்கும் பாத பூஜை
பின்னர் பெற்றோரிடம் இருந்து ஆசி பெறுவர். இந்த வழக்கம் பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களும் பின்பற்றத் தொடங்கினர். தொடர்ந்து கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பாத பூஜை செய்யும் வழக்கம் புதிதாகத் தொடங்கியது. இந்த நிலையில் இவற்றுக்கு எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.
இதற்கிடையே, ‘’புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளைத் தவிர்த்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் புகார் அளித்ததாகத் தெரிகிறது.
பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகள்
இதற்கு புதுக்கோட்டை தனியார் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் பதில் அளித்துள்ளார். அதில், ’’முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு முன் பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகளைத் தவிர்க்க புகார் மனு பெறப்பட்டது. புகார் மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மேற்காண் புகாரின் படி பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் எந்த நிகழ்வுகள் மேற்கொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது’’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.