பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கான கடைசித் தேதியை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் ஆண்டுதோறும் தேசிய சிறார் விருது வழங்கப்படுகிறது. 5 வயது முதல் 18 வயதுக்கு மிகாத, இந்திய குடியுரிமை கொண்ட சிறுவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 


புதுமை சிந்தனை, விளையாட்டு, இசை, கலை, பண்பாடு, சமூக சேவை,  தீரச்செயல்கள்  மற்றும் இதரத் துறைகளில் தனித்துவமான செயல்பட்ட சிறுவர், சிறுமியருக்கு  இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 


கல்வியில் சாதனை- கல்வியில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஏதேனும் ஒரு பாடத்தில் முதலிடம் போன்ற தேசிய அளவில் சாதனை புரிந்திருந்தாலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல ஏதேனும் துறையில் புதுமையான கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தாலும், சிறார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பிரதமரின் தேசிய சிறார் விருது திட்டம் மூலமாக, பால சக்தி புரஸ்கார் விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது


முன்னதாக பிரதமர் மோடி விருது பெற்ற குழந்தைகளிடம் பேசும்போது, 3 உறுதிமொழிகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 


1. தொடர்ந்து செயல்படுவேன் என்பது முதலாவது உறுதிமொழி. இது செயல்பாட்டில் எந்தவிதமான தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாகும். 


2. இரண்டாவது உறுதிமொழி நாட்டுக்கானது. நாம் நாட்டுக்காக உழைத்தால், நாட்டின் நலனுக்காகவே ஒவ்வொரு வேலையையும் செய்தால், அது தன்னலத்தை விட பெரிய பயன்களைத் தருவதாக இருக்கும். நாட்டுக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்று சிறுவர்கள் யோசிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். 


3. மூன்றாவது ஒவ்வொரு வெற்றியும் நம்முடைய பணிவை அதிகரிக்க வேண்டும். நம்முடைய பணிவு நிலை மட்டுமே நமது வெற்றிகளை மற்றவர்கள் கொண்டாடக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தரும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.




இந்நிலையில், பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கான கடைசித் தேதியை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக செப்டம்பர் 30ஆம் தேதி கடைசித் தேதியாக இருந்தது.


பிரதமரின் தேசிய சிறார் விருது 2023-க்கு தேசிய விருதுகளுக்கான இணைய பக்கத்தில் https://awards.gov.in/ விண்ணப்பித்துப் பதிவு செய்யுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, பிஎம்ஆர்பிபி இணைய பக்கத்தில் அதாவது, https://nca-wcd.nic.in/  என்ற இணைய பக்கத்தில் விண்ணப்பித்தவர்களுக்கும் இது பொருந்தும். 


இதையும் வாசிக்கலாம்: Kendriya Vidyalaya Admission: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல்முறையாக மழலையர் வகுப்புகள் தொடக்கம்; முழு விவரம்