கே.வி. எனப்படும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், முதல் முறையாக கே.ஜி. எனப்படும் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கையை கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கி உள்ளது.
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
இதுவரை, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே, கே.வி., பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், 2020 புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, 5 ஆக இருந்த குறைந்தபட்ச வயது, நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து 6 ஆக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 'பால்வாடிகா' என்ற பெயரில், ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தொடங்கப்பட உள்ளன. ப்ரீ.கே.ஜி. வகுப்புகள் பால்வாடிகா
இதுகுறித்த அறிவிப்பை, சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மாணிக்கசாமி வெளியிட்டுள்ளார். இதன்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேரடியாக விண்ணப்ப பதிவு நடக்க உள்ளது. பால்வாடிகா முதல் பிரிவில், 3 முதல் 4 வயது வரை உள்ள மாணவர்களும் பால்வாடிகா இரண்டாம் பிரிவில், 3 வயது முதல் 5 வயது வரை உள்ள மாணவர்களும் பால்வாடிகா மூன்றாம் பிரிவில், 6 வயது வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
விண்ணப்பங்களை, https://chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அக்டோபர் 10ஆம் தேதி வரை காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை முன் பதிவுகள் நடந்தன. பாலவாடிகா ஒன்றாம் பிரிவில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கட்டணம்
இந்த வகுப்புகளுக்கு ஒரு காலாண்டுக்கு, ஒரு மாணவருக்கு 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு, 73051 60907, 971058 8122 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் https://chennaiiit.kvs.ac.in/school-announcement என்ற இணையதளம் மூலம் மற்ற விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி சார்பில் கூறப்பட்டுள்ளது.