சமீபத்தில், உக்ரைனில் உள்ள நான்கு பகுதிகளை ரஷ்யா இணைத்து கொண்டது. இதை கண்டிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 உறுப்பினர்களும் எதிராக 5 பேர் வாக்களித்தனர். இந்தியா உள்பட 35 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதேபோன்ற தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரம் மூலம் நிராகரித்திருந்த நிலையில், இந்த தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தீர்மானத்தையும் இந்தியா புறக்கணித்திருந்தது.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் எந்த ஒரு நாடுகளும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த அதிகாரம் இல்லை. பொதுவாக்கெடுப்பு என ஒன்றை நடத்தி உக்ரைனில் உள்ள நான்கு பகுதிகளை சட்ட விரோதமாக இணைக்க மேற்கொண்ட முயற்சிகளை தீர்மானம் கடுமையாக விமர்சித்திருந்தது.
திங்கள்கிழமை அன்று ஐநா பொது சபையில், உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கு இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றதை தொடர்ந்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐநா பொது சபையில் ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ரஷ்யா விடுத்த கோரிக்கையும் இந்தியா நிராகரித்திருந்தது.
உக்ரைன் தொடர்பாக திறந்த வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அல்பேனியாவும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ரஷ்யாவும் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், வழக்கமான முறையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அல்பேனியாவின் கோரிக்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.
அல்பேனிய கோரிக்கைக்கு ஆதரவாக 107 வாக்குகள் கிடைத்தன. 13 நாடுகள் வாக்கெடுப்பை எதிர்த்தன. 39 நாடுகள் வாக்களிக்கவில்லை. சீனா, ஈரான், ரஷ்யா உள்ளிட்ட 24 நாடுகள் புறக்கணித்தன.
சமீபத்தில், ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டது. ஆவணங்களில் கையெழுத்திட்டதன் மூலம் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஜியா ஆகிய நான்கு பகுதிகளை ரஷிய அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டார்.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது.. இதில் சிக்கி அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக, உள்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதம் அடைந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, ரஷ்யா ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவிலிருந்து அந்நாட்டை சாலை வழியாகவும் ரயில் மார்க்கமாகவும் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாலம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டன.
இந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை என்றாலும் இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாகவே உக்ரைனில் உள்ள நகரங்களில் குண்டு மழை பொழியப்படுவதாக கருதப்படுகிறது.