கரூர் அருகில் உள்ள புலியூரில் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து பெற்றோர் விசாரித்த போது தான் தெரியவந்துள்ளது. மாணவி படிக்கும் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பாபு தன்னை இந்த கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் பாபுவை விசாரித்தனர். அதன்பிறகு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர் பாபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கரூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு.
கரூர் அருகே பூ வியாபாரியிடம் 3 பவுன் சங்கிலி பறித்துச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவியை சேர்ந்தவர் சரசு (வயது 65). பூ வியாபாரி. இவர், சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு இருந்த பூக்களை பறித்துக் கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் சரசுவின் அருகே வந்தனர். பின்னர் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரசு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் 3 பேரும் சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்து சரசு வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரசுவிடம் சங்கிலியை பறித்துச் சென்றது கரூர் ராயனூர் அண்ணாநகரை சேர்ந்த சந்திரமோகன் என்கிற (சக்தி 30), அதே பகுதியை சேர்ந்த நகுலேஸ்வரி (29), கனிஷ்கா ராணி (42) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 பவுன் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.