தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, 85 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
வழக்கமாக ஜூன் மாதத்தில் இருந்து மே மாதம் வரை ஒவ்வொரு கல்வி ஆண்டும் செயல்படும். அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் தொடங்கும். ஆனால் தற்போதெல்லாம் முன்கூட்டியே தொடங்கி விடுகிறது.
மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை
தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதலே மாணவர் சேர்க்கை தொடங்கிவிடும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்திலும் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, உணவு, எழுதுபொருட்கள் என அனைத்துமே இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு, உதவித் தொகை, கல்லூரிகளில் உயர் கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
57 வகையான திட்டங்கள்
இவை தவிர்த்து, நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், கலைத் திருவிழா, நம் பள்ளி நம் பெருமை, மாணவர் மனசு, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி, வானவில் மன்றம், அனைவருக்கும் ஐஐடிஎம், மணற்கேணி, தமிழ்க் கூடல், திறனறித் தேர்வுகள், விழுதுகள் உள்ளிட்ட 57 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
85 ஆயிரத்தைத் தாண்டிய எண்ணிக்கை
இந்த நிலையில், அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும், 85 ஆயிரத்தைத் தாண்டி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரத்து 100 மாணவர்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்போடு பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருவதாக, துறை சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாம்: NEET UG 2024: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் - மார்ச் 16 வரை நீட்டித்து அறிவிப்பு