PM Modi: லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த முனையம்-3 -ஐ, பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
விமான நிலைய முனையத்தை திறந்து வைத்த மோடி:
உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் பகுதியில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது ஷ்ரவஸ்தி, சித்ரகூட் மற்றும் அலிகார் விமான நிலையங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த முனையம் 3-ஐயும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 2,400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட லக்னோ விமான நிலையத்தின் முனையம்-3, பீக் ஹவர்ஸில் ஒரே நேரத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் வரக்கூடிய 4,000 பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.8 கோடி பயணிகளுக்கான சேவையே இலக்கு:
கட்டுமான பணிகளை மேற்கொண்ட அதானி நிறுவன அறிக்கையின்படி, உலகத்தரம் வாய்ந்த முனையத்தின் முதல் கட்டம் மூலம், ஆண்டுக்கு 80 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்ய முடியும். உயர்த்தப்பட்ட பாதைகள் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ஓட்டங்களை பிரிக்கிறது. திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் முடிவுக்கு வரும்போது, ஆண்டுக்கு ஒரு கோடியே 30 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்ய முடியும். இதுதொடர்பாக பேசியுள்ள அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் நிர்வாக இயக்குநர் கரண் அதானி, “சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தின் எங்கள் பார்வை பெரியது மற்றும் தொலைநோக்கு கொண்டது. 2047-48 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 3 கோடியே 80 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் விமான நிலையத்தின் திறனை விரிவுபடுத்துவதே இந்த திட்டத்தின் இலக்கு. இந்த அதிவேக வளர்ச்சியானது உத்தரப் பிரதேசத்தின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை, ஆதரிப்பதற்கான எங்களின் மூலோபாயத்தின் அடித்தளமாகும். நாங்கள் உள்கட்டமைப்பை மட்டும் உருவாக்கவில்லை. 13,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறோம். இதனால் பிராந்திய மற்றும் மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறோம்” என கரண் அதானி தெரிவித்துள்ளார்.
உலக தரத்திலான முனையம்:
இந்த முனையத்தில் உள்ள 72 செக்-இன் கவுண்டர்கள் மற்றும் 62 இமிக்ரேஷன் கவுண்டர்கள் பயணிகளின் விரைவான மற்றும் சுமூகமான போக்குவரத்தை உறுதிசெய்யும். போர்டிங் கேட்கள் 7ல் இருந்து 13 ஆகவும், பயணிகள் போர்டிங் பாலங்கள் 2ல் இருந்து 7 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது, விமான நிலையம் 24 உள்நாட்டு மற்றும் 8 சர்வதேச இடங்களை இணைக்கிறது. திறன் அதிகரிப்பு அதன் செயல்பாட்டுத் திறனை கணிசமாக மேம்படுத்த உதவும்.
டிஜியாத்ரா, பொதுப் பயன்பாட்டிற்கான உணவு பண்டங்களை கொண்ட வெண்டிங் இயந்திரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பேக்கேஜ் ஸ்கிரீனிங் இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்ப வசதிகள் கொண்ட T3 முனையம் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்குகிறது. இந்த விமான நிலையமானது மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை போதுமான அளவில் பயன்படுத்துகிறது. லக்னோ சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையமானது மெட்ரோ இணைப்பு, இன்டர்சிட்டி மின்சார பேருந்து சேவை மற்றும் ஆப்-அடிப்படையிலான டாக்ஸி போன்ற பல போக்குவரத்து இணைப்பு சேவைகளை கொண்டுள்ளது.