2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை சிலியன் மர்ஃபி வென்று சாதனைப் படைத்துள்ளார். 


சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருதின் 96வது பதிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பி திரையரங்கில் நடைபெற்றது.  இந்த விழாவில் சிறந்த படம், நடிகர், இயக்குநர், துணை நடிகர், இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு ஆகிய 7 பிரிவுகளில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) வென்றது. இதில் சிறந்த நடிகராக சிலியன் மர்ஃபி தேர்வு செய்யப்பட்டார்.


இந்த படத்தில் சிலியன் மர்ஃபிஓப்பன்ஹெய்மராக நடித்தார். முன்னதாக கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய பேட்மேன் தி டார்க் நைட், இன்செப்ஷன், டன்கிர்க் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த கிலியன் மர்ஃபி முதல் முறையாக  கிறிஸ்டோஃபர் நோலன் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அணு ஆயுதத்தை முதல் முறையாக கண்டுபிடித்த ராபர்ட் ஜே ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனைப் படைத்தது. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் இப்படம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது .






இந்நிலையில் லண்டனில் பிறந்து அயர்லாந்து நாட்டின் குடியுரிமை பெற்று நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்ற மூன்றாவது ஐரிஷ் நடிகர் சிலியன் மர்ஃபி ஆவார். விருது பெற்றவுடன் பேசிய அவர், “அணுகுண்டை உருவாக்கிய மனிதனைப் பற்றி நாங்கள் ஒரு திரைப்படத்தை உருவாக்கினோம். நல்லதோ, கெட்டதோ நாம் இப்போது ஓபன்ஹைமர் உலகில் வாழ்கிறோம். உலகமெங்கும் உள்ள அமைதியை விரும்புபவர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிக்க விரும்புகிறேன். அயர்லாந்து குடிமகனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்” என கிலியன் மர்ஃபி பேசினார்.