தஞ்சாவூர்: தமிழ், கன்னடம், மலையாளம், மராட்டி உள்பட 13 மொழிகளில் பொறியியல், பட்டயக் கல்வி பாடத்திட்டங்களை உருவாக்கி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர் டி.ஜி. சீத்தாராம் தெரிவித்தார்.



தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு தலைவர் சீத்தாராம் பேசியதாவது:

தேசியக் கல்விக் கொள்கை மூலம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். ஆய்வும், புத்தாக்கமும் நம் நாட்டின் பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் நம் நாடும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம், கைப்பேசி தொழில்நுட்பத்தில் சாட் ஜிபிடியால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. மனித ஆற்றலுக்கு பதிலாக சாட் ஜிபிடி பயன்படுத்தப்படுவதால், ஏராளமான வேலைவாய்ப்புகள் மறைந்துவிடும். அதே சமயம், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். எனவே, எண்ம தொழில்நுட்பத் திறன் காரணமாக இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

உலக முழுவதுக்கும் அதிக அளவில் பட்டதாரிகளை அனுப்பி வைக்கும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அதாவது, இருபது லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். சந்திரயான் 3 திட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.





அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு லட்சிய செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நாடு முழுவதும் பல்வேறு பொறியியல் கல்வி நிறுவனங்களில் 110 செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 100 செயலிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு 1987ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. திறன்மிக்கப் பொறியாளர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்குவதற்காகப் பொறியியல் கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த கற்றல், கற்பித்தல் அகாடமி உருவாக்கப்பட்டன.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கட்டுப்பாட்டில் 3 ஆயிரத்து 600-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பொறியாளர்கள் உருவாக்கப்படுகின்றனர். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் உலக அளவில் மூன்றாமிடத்தில் உள்ளோம். உலகில் முதலிடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

தாய்மொழியில் பொறியியல் கல்வியை வழங்குவதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ், கன்னடம், மலையாளம், மராட்டி உள்பட 13 மொழிகளில் பொறியியல், பட்டயக் கல்வி பாடத்திட்டங்களை உருவாக்கி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் 17 நாடுகளிலிருந்து 5 லட்சம் பேர் இப்பாடத்திட்டங்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தப் பாடத்திட்டங்கள் பல்வேறு வல்லுநர்களைக் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர், மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் ஆர். சேதுராமன் தலைமை வகித்தார். துணைவேந்தர் எஸ். வைத்தியசுப்பிரமணியம், முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.