தமிழ்நாட்டில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22 தொடங்கி, செப். 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


முதல் நாளில் அரசுப் பள்ளிகளில் படித்த சிறப்புப் பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளி, முன்னாள் படை வீரர், விளையாட்டு வீரர்) கலந்தாய்வு தொடங்க உள்ளது. ஜூலை 23ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடக்கிறது. தொடர்ந்து பொதுப் பிரிவு சிறப்புப் பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளி, முன்னாள் படை வீரர், விளையாட்டு வீரர்) கலந்தாய்வு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தக் கலந்தாய்வுகள் அனைத்தும் இணைய வழியிலேயே நடக்கின்றன.


ஜூலை 29 முதல் பொதுக் கலந்தாய்வு


தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு ஜூலை 29 முதல் செப்டம்பர் 3 வரை நடக்கிறது. துணைக் கலந்தாய்வு செப். 6 முதல் 9ஆம் தேதி நடைபெற உள்ளன.


இன்னும் சில நாட்களில் பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், மாணவர்களின் கட்- ஆஃப் மதிப்பெண்கள் என்னவாகும்? கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும், அதிகரிக்கும் என்றெல்லாம் பலவாறாகக் கருத்துகள் நிலவி வருகின்றன.


நாம் கடந்த ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடும்போது, 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த முறை குறைந்துள்ளது. 195 கட் ஆஃப் மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2023ஆம் ஆண்டைவிடக் குறைவாகவே உள்ளது. அதேநேரத்தில் 194.5 முதல், 100 மதிப்பெண்கள் வரையிலான மாணவர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு கூடியுள்ளது. இதனால் உயர் கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, கட் ஆஃப் மதிப்பெண் குறையக் குறைய, அதைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இந்த நிலையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்துப் பிரபல கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறி உள்ளதாவது:


’’பொதுப் பிரிவு கலந்தாய்வில், 195- 200 வரை கட் ஆஃப் குறையும். இந்த அளவுக்குக் கட் ஆஃப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடக் குறைவானவர்கள் உள்ளதால் கட் ஆஃப் குறையும். கிட்டத்தட்ட ஒரு மதிப்பெண் வரை கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. எனவே டாப் கல்லூரிகளில் கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது. 190-195 வரையிலான கட் ஆஃப் கடந்த ஆண்டை ஒட்டியே இருக்கும்.


185 முதல் 190 வரை கட் ஆஃப் மதிப்பெண் எப்படி இருக்கும்?


அதேபோல 185 முதல் 190 வரை ஒரு கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும். இந்த அளவில் கடந்த ஆண்டை விட மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கட் ஆஃப் நிச்சயம் அதிகரிக்கும். 175 முதல் 185 வரை 2- 5 கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


6 கட் ஆஃப் அதிகரிக்கும்


அதேபோல 170- 175 வரை 6 கட் ஆஃப் அதிகரிக்கும். 160-170 வரை 7 கட் ஆஃப் அதிகரிக்கும். 150 முதல் 160 வரை 8 கட் ஆஃப் அதிகரிக்கும். 120-150 வரை 10 மதிப்பெண் வரை கட் ஆஃப் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


பொதுவாகக் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் நிறைய தெரிவுகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டியது அவசியம்’’.


இவ்வாறு ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: Engineering Counselling 2024: அட்டவணையை குறிச்சி வச்சிக்கோங்க! ஜூலை 22 தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு!