Usha Chilukuri: அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஜேடி வான்ஸ்-ஐ துணை அதிபர் வேட்பாளராக கடந்த ஜுலை மாதம் அறிவித்தது குறிப்பிடத்தகக்து.


அமெரிக்க துண அதிபர் வேட்பாளர் அறிவிப்பு:


அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜுலை மாதம் தேர்தெடுக்கப்பட்டார். அதைதொடர்ந்து, தன்னுடன் சேர்ந்து துணை அதிபர் பதவிக்கு போட்டியிட,  ஓஹியோ மாகாண செனட்டரான ஜே.டி. வான்ஸ்-ஐ தேர்தெடுத்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் பெரும்பான்மைக்கு தேவையானதை காட்டிலும் கூடுதலானபிரதிநிதிகளின் வாக்குகளை பெற்றுள்ளார்.  இதையடுத்து தான், வான்ஸின் மனைவி பற்றி அறிய இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். காரணம், வான்ஸின் மனைவியான உஷா சிலுகுரி, இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது தான். 


யார் இந்த உஷா சிலுகுரி:


அமெரிக்காவில் குடியேறிய ஆந்திராவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தம்பதியின் மகள் தான் உஷா சிலிகுரி. தேசிய நிறுவனத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை பட்டமும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டமும் பெற்றார். நீதித்துறையில் பிரபலமான உஷா, வழக்கறிஞராக பணியை தொடங்குவதற்கு முன்பாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜான் ராபர்ட்ஸ் மற்றும் பிரட் கவனாக்கிற்கு எழுத்தராக பணியாற்றினார்.  கல்வி மற்றும் கடின உழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்த உஷா, யேல் ஜார்னல் ஆஃப் லா & டெக்னாலஜியின் நிர்வாக ஆசிரியராகவும், தி  யேல் லா ஜார்னலின் நிர்வாக மேம்பாட்டு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.


2014ல் வான்ஸ் உடன் திருமணம்..


உஷாவும், வான்ஸும் முதன் முதலில் யேல் சட்டப்பள்ளியில் சந்தித்தனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை தொடர்ந்து, அதே ஆண்டில் கெண்டக்கியில் திருமணம் செய்து கொண்டனர். ஒரு இந்து அர்ச்சகர் அந்த திருமணத்திற்கு தலைமை தாங்கியதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர். உஷா வான்ஸ் தனது கணவரின் வெற்றியில் நுட்பமான மற்றும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளார். கிராமப்புற வெள்ளை அமெரிக்காவின் சமூக சரிவு குறித்த அவரது எண்ணங்களை ஒழுங்கமைப்பதில் அவர் வான்ஸுக்கு உதவியுள்ளார்.  கடந்த காலத்தில், வான்ஸ் ஒஹியோ செனட் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருடன் சில இடங்களில் உஷா பரப்புரையிலும் ஈடுபட்டுள்ளார்.


கணவர் பற்றி உஷா சிலிகுரி சொல்வது என்ன?


தனது கணவர் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு உஷா பேட்டி அளித்தார். அப்போது, “வான்ஸ் எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்களா என்று எனக்கு தெரியவில்லை. அவர் சொல்வதும் செய்வதும் அனைத்தும் பல சிந்தனையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர் எப்பொழுதும் சிறப்பாகச் செயல்பட முயற்சிக்கிறார். எனது கணவரை ஆதரிப்பதற்கு சில வித்தியாசமான காரணங்கள் உள்ளன. ஒன்று, நான் ஒரு மதநம்பிக்கை கொண்ட குடும்பத்தில் வளர்ந்தேன். என் பெற்றோர்கள் இந்துக்கள். அதுவே அவர்களை நல்ல பெற்றோராக்கியது. அவர்களை மிகவும் நல்ல மனிதர்களாக மாற்றியது. அதனால் நான் அதை பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதன் சக்தியை என் சொந்த வாழ்க்கையில் நான் பார்த்தேன். ஜேடி எதையோ தேடுகிறார் என்று எனக்குத் தெரியும். இந்த வாய்ப்பு அவருக்குச் சரியாகனதாக இருக்கும் என்று  தோன்றுகிறது” என உஷா சிலிகுரி பேசியுள்ளார்.