TNEA Counselling 2024 Date in Tamilnadu: தமிழ்நாட்டில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூலை 22 தொடங்கி, செப். 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ் இன்று (ஜூலை 10) வெளியிட்டார். இதில் செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி முதலிடம் பெற்றுள்ளார். திருநெல்வேலி மாவட்ட மாணவி நிலஞ்சனா இரண்டாவது இடத்தையும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
அதேபோல அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேலத்தைச் சேர்ந்த ரவணி என்னும் மாணவி, 199.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கோவை மாணவி கிருஷ்ணா அனூப் 198.50 கட் ஆஃப் உடன் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல வேலூர் மாணவர் சரவணன் 198.5 கட் ஆஃப் உடன் 3ஆவது இடத்தைப் பெற்று உள்ளார்.
ஜூலை 22 முதல் கலந்தாய்வு
தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜூலை 22 கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் நாளில் அரசுப் பள்ளிகளில் படித்த சிறப்புப் பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளி, முன்னாள் படை வீரர், விளையாட்டு வீரர்) கலந்தாய்வு தொடங்க உள்ளது. ஜூலை 23ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடக்கிறது.
தொடர்ந்து பொதுப் பிரிவு சிறப்புப் பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளி, முன்னாள் படை வீரர், விளையாட்டு வீரர்) கலந்தாய்வு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தக் கலந்தாய்வுகள் அனைத்தும் இணைய வழியிலேயே நடக்கின்றன.
ஜூலை 29 முதல் பொதுக் கலந்தாய்வு
தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு ஜூலை 29 முதல் செப்டம்பர் 3 வரை நடக்கிறது. துணைக் கலந்தாய்வு செப். 6 முதல் 9ஆம் தேதி நடைபெற உள்ளன.
எஸ்சி அருந்ததியர் மாணவர்களுக்கான காலியிடத்தை எஸ்சி மாணவர்களுக்கு மாற்றும் கலந்தாய்வு செப்.10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதியோடு கலந்தாய்வு முடிவு பெறுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tneaonline.org/
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 1,99,868 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.