பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில், ”தமிழ்நாட்டில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான  மின் கட்டணத்தை 4.83 சதவீதம் திமுக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. மக்கள் அளித்த இந்த வெற்றிக்கு, திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த 6,000 கோடி ரூபாய் மின் கட்டண உயர்வு.





கட்டண உயர்வை திரும்ப பெறுக


தமிழகத்தில் ஏற்கனவே அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மின் கட்டணம் அதிகரித்ததால் அரிசி விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்கனவே கூறி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் மின் கட்டணம் உயர்ந்துள்ளதால் அரிசி விலை மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.


பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசு வரியை, திமுக அரசு குறைக்காததால், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உள்ளது. இப்போது மின் கட்டணமும்  உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து, சாதாரண ஏழை, நடுத்தர மக்களுக்கு சுமை அதிகரிக்கும். மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திமுக அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாக நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க : TN Electricity Charge Hike: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் மக்கள்!