கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று (ஜூலை 4) தொடங்கி உள்ளன. மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். அதேபோல மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளுக்கான வகுப்புகளும் விரைவில் தொடங்க உள்ளன. இந்த நிலையில், சத்தான மதிய உணவுகளை ஈஸியாக, விரைவாக எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம். 


மாணவர்களுக்கு படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உண்ணும் உணவும் முக்கியம். சத்தாக உணவுகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே, சரியாகப் படிக்க முடியும். துரித உணவுகள் சுவையூட்டிகளால், அதிக சுவையைக் கொடுத்தாலும் அவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது செரிமானப் பிரச்சினை, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். 


கலவை சாதங்கள்


அதனால் எளிதாகவும் அதே நேரத்தில் சத்தாகவும் மதிய உணவுகள் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு வெரைட்டி ரைஸ் எனப்படும் கலவை சாதங்கள் எளிதான தேர்வாக இருக்கும். அத்துடன் காய்கறிகள் ஏதேனும் ஒன்று, அல்லது சில காய்கறிகள் அடங்கிய பொரியலை எடுத்துச் செல்லலாம். 


கல்லூரி செல்லும்போது டிஃபன் பாக்ஸை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டுமா என்று மாணவர்கள் நினைக்கலாம். அத்தகைய சூழலில் வாரத்தில் ஒரு நாள் வேண்டுமானால், நண்பர்களுடன் சேர்ந்து பிடித்த உணவுகளை வெளியே உண்ணலாம். அதைத் தவிர்த்து பிற நாட்களில், வீட்டில் அன்பும் சத்துகளும் சேர்த்து சமைக்கப்பட்ட உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். 


கல்லூரி மாணவர்கள் வெளியே வீடு எடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து தங்கி இருப்பார்கள். அவர்களும் கீழே குறிப்பிட்டுள்ள டிப்ஸைப் பின்பற்றலாம். 




எளிதாக, விரைவாக சமைப்பது எப்படி?


எளிதாக மதிய உணவுகளைச் செய்ய குக்கர், ஒரே பாத்திரத்தில் சாதம் (One Pot Rice) ஆகிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். வெள்ளை சாதத்தை பாத்திரத்திலோ, குக்கரிலோ வைத்து இறக்கிவிட்டு, கலவை சாதங்களைச் செய்யலாம். 


காலம் காலமாகச் செய்யப்படும் உணவுகளாக இருந்தாலும், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், புளிசாதம், தக்காளி சாதம் ஆகியவை இன்றும் ட்ரெண்டியாகவே இருக்கின்றன. உடன் தொட்டுக்கொள்ள பொரியலை மட்டும் மாற்றிக்கொண்டே இருக்கலாம்.


கலந்த சாதம் செய்வது எப்படி?


பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கடுகு, உளுத்தப்பருப்பு, கடலைப் பருப்பு போட வேண்டும். பொரிந்தவுடன் வெங்காயம், தேவையான அளவு மிளகாய், கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளுங்கள்.  தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 


எலுமிச்சை சாதம் எனில், பிழிந்துவைத்த எலுமிச்சை நீர், தேங்காய் சாதம் எனில், துருவிய தேங்காய், புளி சாதம் எனில், புளிக் கரைசல், தக்காளி சாதம் என்றால், நறுக்கிய தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். முட்டை சாதத்துக்கு பச்சை முட்டையை உடைத்து ஊற்றி  வதக்கிக்கொள்ள வேண்டும். அதேபோல கேரட் சாதத்துக்கு துருவிய கேரட்டையும் பீட்ரூட் சாதத்துக்கு துருவிய பீட்ரூட்டையும் சேர்க்க வேண்டியது முக்கியம். மாங்காய் சாதத்துக்கு துருவிய பச்சை மாங்காயும், நெல்லிக்காய் சாதத்துக்கு துருவிய நெல்லிக்காயும் சேர்க்க வேண்டும்


உணவின் சுவையைக் கூட்டுவது எப்படி?


பச்சை வாசனை போய், நன்றாக வதங்கியவுடன் வறுத்துவைத்த வேர்க் கடலை அல்லது முந்திரியை உடன் சேர்க்கவும். சுவை பிடிக்குமென்றால், இரண்டையும் சேர்த்தே பயன்படுத்தலாம். இதனால் கலவை சாதங்களின் சுவை கூடும், உணவுக்கு ’ரிச்’ ஃபீல் கிடைக்கும்.


கேரட் சாதம், பீட்ரூட் சாதம் ஆகியவற்றை சமைத்து, இறக்கும் முன்னால் அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டால், சுவை கூடும். 


புதினா சாதம், கொத்தமல்லி சாதம்


மற்ற கலவை சாதங்களில் இருந்து புதினா சாதம், கொத்தமல்லி சாதம் ஆகியவற்றை மட்டும் சற்றே வேறுபட்ட முறையில் செய்ய வேண்டியது அவசியம். புதினா தழைகளைத் தனியாக எடுத்து மிக்ஸி ஜாருக்குள் போட்டுக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு இஞ்சி, சில பல் பூண்டுகள், அரை ஸ்பூன் சீரகம், காரத்துக்கு ஏற்ற அளவு மிளகாய், சிறிதளவு புளி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட்டாக அரைக்க வேண்டியது முக்கியம். 


வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடவும். பிறகு வெங்காயம் (விரும்பினால்) சேர்த்து வதக்கவும். கருவேப்பிலை சேர்த்து வதக்கிவிட்டு, அரைத்து வைத்த பேஸ்ட்டை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு சாதத்தைக் கலந்தால், புத்துணர்ச்சியை அளிக்கும் புதினா சாதம் தயார். கொத்தமல்லி சாதத்துக்கும் இதே வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். இறக்கும்போது வறுத்துவைத்த வேர்க் கடலை அல்லது முந்திரியை உடன் சேர்க்க வேண்டும்.


கருவேப்பிலை சாதத்துக்கு, பேஸ்ட் அரைப்பதற்கு பதிலாக, எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், முந்திரி சேர்த்து தாளித்து, ஏற்கெனவே அரைத்து வைக்கப்பட்ட கருவேப்பிலை பொடியைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் சாதத்தைக் கலந்தால் சத்தான கருவேப்பிலை சாதம் தயார். 



தயிர் சாதம்


வழக்கமாக தயிரை ஊற்றிக் கிளறும் சாதத்தைவிட, உறை ஊற்றிச் செய்யும் தயிர் சாதங்கள் தனித்துவமான சுவையைக் கொடுக்கும். இதற்கு சாதத்தைக் குழைவாக வேக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலேயே பாலை ஊற்றி, சிறிதளவு தயிரைச் சேர்த்துவிட வேண்டும். கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், உப்பு போட்டு தாளித்து சேர்த்தால், சுவையான தயிர் சாதம் தயார்.  ஃப்ளேவருக்காக பன்னீர் திராட்சை, மாதுளை, கொத்தமல்லி தழை ஆகியவற்றைச் சேர்க்கலாம். 


எனினும் தயிர் சாதம், சாம்பார் சாதம் ஆகியவற்றின் செய்முறை ஊர்களுக்கு ஊர் மாறும். ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு ஸ்டைலில் சமைப்பதைப் பார்க்கலாம். 


சாம்பார் சாதம்


ஒரு வாணலியை எடுத்து எண்ணெய் ஊற்றவும். அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு,  முருங்கைக்காய், பட்டாணி என தேவையான காய்கறிகளுடன், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து, காய்கறிகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.


தேவையான அளவு மிளகாய் தூள், மசாலா தூளைச் சேர்த்து கலந்து விடவும். பிறகு புளி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். காய்கறிகள் வந்த பிறகு, ஊற வைக்கப்பட்டுள்ள அரிசி, துவரம் பருப்பைச் சேர்க்கவும். எல்லாவற்றையும் கலந்து, உப்பு, காரம் பார்த்து குக்கரில் விசில் விட்டால் சுவையான பிஸிபேளாபாத் கமகமக்கும். 


வெஜ் பிரியாணி, காளாண் பிரியாணி 


இதற்கு முதலில் பாசுமதி அரிசியைக் கழுவி, 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, தனியாக எடுத்து வைக்கவும். காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு,  பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், புதினா இலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து மசாலா தயார் செய்துகொள்ளலாம். நேரமில்லாத சூழலில், பிரியாணி மசாலாவையே சேர்த்துக்கொள்ளலாம்.


அடுத்து, வாணலி வைத்து எண்ணெய், நெய் ஊற்றிக் காய்ந்தவுடன் பிரியாணி இலை, கிராம்பு, அன்னாசிப் பூ, பட்டை, ஏலக்காய், கல்பாசி போட்டு வறுத்துக்கொள்ளவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். உடன் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் தூள், உப்பு, தயிர் சிறிதளவு சேர்க்கவும். தேவையான அளவு காய்கறிகள் அல்லது காளானை மசாலாவுடன் சேர்த்து வதக்கவும். நன்றாக வதக்கிய பிறகு, கையளவு கொத்தமல்லி, புதினா தழைகளைச் சேர்த்து வதக்கவும். அரிசி போட்டு, உப்பு, காரம் பார்த்து, குக்குரை மூடி வைக்கவும். 2 விசில் வந்தபிறகு அடுப்பை அணைத்துவிடவும். சிறிது நேரம் கழித்துத் திறக்கவும். மணமணக்கும் பிரியாணியை உங்களால் பிரியவே முடியாது. 




எந்த உணவையுமே வெந்த உடனே இறக்காமல், அந்த சூட்டிலேயே சிறிது நேரம் விட்டுவிட்டால், சாதம் பொலபொலவென, உடையாமல் இருக்கும். 


மொறுமொறு உணவு வகைகள்


கிரிஸ்ப்பி எனப்படும் மொறுமொறு உணவு வகைகள் இந்த தலைமுறையினருக்கு அதிகம் பிடிப்பதால், அவ்வாறு சமைக்க முயற்சி செய்யலாம். எனினும் அதீத எண்ணெய் கொண்டு, தினசரி பொரித்த உணவு வகைகள் சமைப்பதைத் தவிர்க்கலாம்.


இதற்கு முதலில் வெண்டைக்காய், உருளைக் கிழங்கு, கருணைக்கிழங்கு உள்ளிட்ட காய்களைத் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துவிட்டு, பின்னர் குறைந்த எண்ணெய் கொண்டு, குறைவான தீயில் பிரட்டிக் கொண்டே இருந்தால் பொரியல், வறுவலாக மொறுமொறுப்பாக மாறிவிடும். 


நவீன உணவுகள்


இந்தக் கால தலைமுறையினருக்கு நவீன உணவுகள் பிடிக்கும் என்பதால், சப்பாத்திக்குள் சமைத்த காய்கறிகளைச் சேர்த்து ரோல் ஆக்கி, ஸ்டஃப்டு சப்பாத்தியாகப் பரிமாறலாம். பாஸ்தா, வெஜ் சாண்ட்விச், வெஜ் கட்லெட், பனீர் டிக்கா, பாவ் பாஜி ஆகியவற்றையும் வீட்டிலேயே முயற்சிக்கலாம். 


இதையும் வாசிக்கலாம்: Positive College Experience: வசந்த காலம்...வருங்காலத்துக்கான அடித்தளம்: கல்லூரி வாழ்க்கைக்குள் நுழையும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை!