கல்லூரிக் காலம்தான் வாழ்க்கையிலேயே வசந்த காலம் என்பார்கள். அந்த வகையில், 2022- 23ஆம் கல்வி ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு, கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று (ஜூலை 4) தொடங்கி உள்ளன. மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். அதேபோல மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளுக்கான வகுப்புகளும் விரைவில் தொடங்க உள்ளன. 


கட்டுப்பாடுகள் நிறைந்த 14 ஆண்டு கால பள்ளி வாழ்க்கைக்குப் பிறகு, உற்சாகமும் குதூகலமும் கொப்பளிக்கும் கல்லூரி வாழ்க்கைக்குள் மாணவர்கள் அடியெடுத்து வைத்துள்ளனர். இந்த நேரத்தில் கல்லூரிக் காலத்தை பாசிட்டிவான, மகிழ்வான அனுபவமாக மாற்றுவது எப்படி பார்க்கலாம்.


ஆடையின் அவசியம் 


ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். இப்போது ஆடைதான் எல்லாம் என்று மாறிவிட்டது. அதனால் கல்லூரிக்குச் செல்லும்போது நேர்த்தியான ஆடைகளைத் தேர்வு செய்து அணிந்து செல்ல வேண்டும்.  


உங்களை அறிமுகம் செய்ய வேண்டும்


புதிதாக எங்கு சென்றாலும், சுய அறிமுகம் செய்துகொள்ள வேண்டியது அத்தியாவசியமாக ஆகிவிட்டது. வகுப்பிலும் அதைச் செய்ய வேண்டி இருக்கும். அதனால், நம்மைப் பற்றி என்ன சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்று யோசித்து வைத்துக்கொள்ளலாம். தற்பெருமையாக இல்லாத வகையில், அதே நேரத்தில் நம்முடைய திறமைகளை சுவாரசியமாக, பிறர் ரசிக்கும் வகையில் எடுத்துச் சொல்லலாம். இது மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்தித் தனித்துக் காட்டும். பேச்சுத் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆங்கிலத்திலேயே பேசும் திறனை உறுதி செய்ய வேண்டும். 




நேர மேலாண்மை முக்கியம்


வாகன நெரிசல், பயண நேரம் ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு, சரியான நேரத்துக்கு வகுப்புக்குச் செல்வதை உறுதிசெய்ய வேண்டும். இது தேவையில்லாத பதற்றத்தைத் தவிர்க்கும். ஆசிரியர்களிடம் நின்று, விளக்கம் சொல்லும் நிலை ஏற்படாமல் தடுக்கும்.  அதே போல படிப்புக்கும் பொழுதுபோக்குக்கும் நண்பர்களிடையே நேரம் செலவிடவும் நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள். 


நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள் 


முற்றிலும் புதிய சூழல், புது நபர்கள், வேறு ஆசிரியர்கள் என்ற நிலையில், தயக்கம் ஏற்படும். எனினும் சூழலுக்குப் பொருந்தி அங்கே உள்ளவர்களிடம் பேசி, பழக வேண்டியது முக்கியம். ஒத்த அலைவரிசை கொண்டவர்களுடன் நட்பைத் தொடங்கலாம். எல்லோரும் நண்பர்களாகி, மனம் விட்டுப் பேசிச் சிரிக்கும்போது தனியராக இருப்பது நமக்கு அழுத்தத்தை உருவாக்கும். 


தயக்கத்தைத் தவிருங்கள்


எந்த வகுப்பையும் முடிந்த அளவு தவற விடாதீர்கள். பாடங்களில் சந்தேகம் இருப்பின், இணையத்தில் தேடிப் பாருங்கள். தேவைப்பட்டால் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு கொள்ளுங்கள். வகுப்புக்கு வர முடியாத பட்சத்தில், நடத்தப்பட்ட பாடங்களை நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். கல்லூரிகளில் இருக்கும் நூலகங்கள், ஆய்வகங்களைப் பயன்படுத்துங்கள்.


படிப்புதான் முக்கியம் 


இவை எல்லாவற்றையும்விட படிப்பதற்குத்தான் கல்லூரிக்குச் செல்கிறோம் என்பதை நினைவில் வையுங்கள். ஆளுமைப் பண்பு, நட்பு வட்டம், கூடுதல் திறன்கள், பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு நேரம் செலவிட்டாலும், கற்றலின் அவசியத்தை மறக்காமல் இருங்கள். மனப்பாடம் செய்யாமல், புரிந்து படியுங்கள். 


மேலே கூறிய அனைத்தையும் தவறாமல் பின்பற்றினால், ஒவ்வொரு மாணவரின் கல்லூரி வாழ்க்கையும், மறக்கவே முடியாத நல் அனுபவத்தைத் தருவதோடு, அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும்.