திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் பேரூராட்சி இந்திரா நகரை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திக்கேயன். இவருடைய மனைவி பூங்காவனம். இவர்களுக்கு ஹரிகரன், கோபி என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கோபி என்பவர் 10ம் வகுப்பு வரையில் படித்துள்ளார். மேலும் ஏற்கனவே பூங்காவனம் தனது பூர்வீக சொத்து சம்மந்தமாக தன்னுடைய தாயார் மீது வழக்கு தொடுத்து போளுர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் பூங்காவனம் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். தந்தை கார்த்திகேயன் என்பவர் தற்போது வரையில் காணவில்லை, இதனால் ஹரிகரன் மற்றும் கோபி ஆகியோர் பெற்றோரை இழந்து தனிமையில் வாடி வந்துள்ளனர்.


 




 


சிறுவன் இறந்ததாக இறப்பு சான்றிதழ் பெற்ற பாட்டியின்  சதித்திட்டம்


மேலும், தனிமையில் வாடியதால் இதனை பயன்படுத்திய பாட்டி சின்னபொண்ணு, பெரியம்மா பரமேஸ்வரி ஆகியோர் 2 சிறுவர்களிடம் ஆசைவார்த்தை கூறி வழக்கை முடித்து கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இதில் பூங்காவனத்தின் இளைய மகன் கோபி இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கோபியை உதறிவிட்டு ஹரிகரனை மட்டும் பாட்டியின் அரவணைப்பில் தற்போது பாதுகாத்து வருகின்றனர். சிறுவன் கோபி உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் உணவுபெற்று தற்போது வாழ்ந்து வருகின்றான். இதனையடுத்து திடீர் திருப்பமாக ரேஷன் கடைக்கு சென்று தன் குடும்ப கார்டில் பொருட்களை கோபி பெற்ற போது குடும்ப அட்டையில் உன் பெயர் ( கோபி ) இல்லை என்று கூறி கார்டில் உள்ளவர்களை அழைத்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதால் சிறுவன் கோபி அதிர்ச்சியடைந்தான். பின்னர் சிறுவன் கோபி போளுர் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டதற்கு சிறுவன் கோபி என்பவர் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளதால், ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கம் செய்யபட்டதாக அதிகாரிகள் கூறியது, சிறுவன் கோபியை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.


 




 


தன்னுடைய பாட்டி சின்னபொன்னு மற்றும் பெரியம்மா பரமேஸ்வரி ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சிலர் உடந்தையில் போலி ஆவணம் தயாரித்து பேரன் கோபி இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் பெற்று, அதன் மூலம் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்து, வாரிசு சான்றிதழ் பெற முயன்று சொத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் களம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‌ இது தொடர்பாக சிறுவன் கோபி உறவினர்களின் உதவியுடன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலியாக ஆவணம் தயாரித்து அதன் மூலம் இறப்பு சான்றிதழ் பெற்று சொத்தினை அபகரிக்க முயன்றுள்ளதாக கூறி பாட்டி சின்னபொன்னு, பெரியம்மா பரமேஸ்வரி இதற்கு உடைந்தையாக இருப்பதாக ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சிலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.