சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இயக்குனர் சசிகுமார் ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


சசிகுமார் அறிவிப்பு:


இதுதொடர்பாக சசிகுமார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “இவை அனைத்தும் நேற்று நடந்தது போல உள்ளது. சுப்ரமணியபுரம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் சுப்ரமணியபுரம் படத்தை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி அதனை கொண்டாடினீர்கள். இந்த முக்கியமான நாளில் நான் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளேன் என்பதை தெரிவிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் அது படமா அல்லது வெப் சீரிஸா என்பது தொடர்பான எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை.






சசிகுமாரின் படங்கள்:


மதுரையை சேர்ந்த சசிகுமார் பாலா மற்றும் அமீர் ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதைதொடர்ந்து, அவரது இயக்கத்தில் உருவான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அந்த படத்தில் சசிகுமாரின் இயக்கம் மட்டுமின்றி,  அவர் ஏற்று நடித்த பரமன் எனும் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து ஈசன் எனும் திரைப்படத்தை இயக்கினார்.


நடிகரான சசிகுமார்:


அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கியே வேகத்திலேயே, சமுத்திரகனி இயக்கத்தில் உருவான நாடோடிகள் படத்தில் கருணாகரன் எனும் நாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த படம் கொடுத்த வெற்றியால் சசிகுமார் கிராமத்து கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நபர்  என அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இதையடுத்து, போராளி, சுந்தர பாண்டியன் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து, முழு நேர நடிகரானார். இதையடுத்து, இயக்குனர் பணியை முற்றிலுமாக தவிர்த்து வந்தார். இந்நிலையில் தான், சுப்ரமணியபுரம் வெளியான 15 ஆண்டுகளுக்குப் பிறகு, 13 ஆண்டுகால இடைவெளிப்பின் மீண்டும் இயக்குனராக உள்ளதாக சசிகுமார் அறிவித்துள்ளார்.


சுப்ரமணியபுரம் ஏன் கொண்டாடப்படுகிறது?


ஒரு கதையைச் சொல்வதற்கான மிகச்சரியான தொடக்கம் மையப்பிரச்சனை முடிவு ஆகிய மூன்று அம்சங்களும் மிகக்கச்சிதமாக திரைக்கதையைக் கொண்ட படம் சுப்ரமணியபுரம். அழகர், பரமன், காசி, டோபா, டும்கா ஆகிய ஐந்து நண்பர்கள் எந்த வித இலக்கும் இல்லாமல் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார்கள். சின்ன சின்ன தவறுகளை செய்து அடிக்கடி சிறைக்கு சென்று வருகிறார்கள். இவர்களுக்காக பேசி இவர்களை சிறையில் இருந்து வெளியே எடுக்கிறார் சோமு மற்றும் அவரது சகோதரனான கனுகு. முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் சோமு. எப்படியாவது வரக்கூடிய தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது அவரது இலக்காக இருக்கிறது. இதற்கிடையில் சோமுவின் மகளான துளசியுடன் காதல் கொள்கிறான் அழகர். தேர்தலில் வெற்றிபெறாமல் போகிறார் சோமு. அவரை எதிர்த்து போட்டியிட்டவரை இந்த நான்கு நண்பர்களை வைத்து கொலை செய்ய வைக்கிறார் கனகு. கனகு மேல் தாங்கள் வைத்திருக்கும் மரியாதைக்காக கொலை செய்துவிட்டு தங்களது ஊரைவிட்டு தப்பி ஓடுகிறார்கள் இந்த நால்வரும். ஆனால் காவல் துறை அவர்களை கண்டுபிடிக்கிறது. சிறையில் மாட்டிக்கொண்ட அழகர் மற்றும் பரமாவை ஜாமீனில் சோமு எடுப்பார் என்று எதிர்பார்க்க இவர்களை தவிர்த்து வருகிறார் சோமு. இதையடுத்து நட்பு, காதல் மற்றும் துரோகம் ஆகியவற்றால் நடப்பதை கொண்டு ஒரு எதார்த்தமான திரைக்கதையை வடிவமைத்து அசத்தி இருந்தார் சசிகுமார்.