தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளான நேற்று தமிழ் பாடத்துக்கு தேர்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 11 ஆயிரத்து 132 மாணவர்கள், 12 ஆயிரத்து 54 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 186 பேர் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 87 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு நன்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும் வழங்கப்பட்டது.மாணவ,மாணவிகள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் 9 ஆயிரத்து 833 மாணவர்கள், 11 ஆயிரத்து 144 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 977 பேர் தேர்வு எழுதினர். ஆனால் 1,299 மாணவர்கள் மற்றும் 910 மாணவிகள் என 2 ஆயிரத்து 209 பேர் தேர்வு எழுத வரவில்லை.
Chaithra Navarathri : அடுத்த வாரம் வரும் சைத்ர நவராத்திரி...என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
அதே போல் தேனி மாவட்டத்தில் 142 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 8,038 மாணவர்கள், 7,514 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 552 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுத அனுமதி பெற்றிருந்தனர். இதற்காக மாவட்டத்தில் 53 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. முதல் நாளான நேற்று தமிழ் பாடத்துக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வை 14 ஆயிரத்து 539 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 1,013 பேர் தேர்வு எழுத வரவில்லை. கண் பார்வையற்றவர்கள் மற்றும் தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர்.
மேலும் தனித்தேர்வர்களுக்கு 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு தமிழ் பாடத்தேர்வை எழுத 191 பேர் அனுமதி பெற்றிருந்தனர். அவர்களில் 21 பேர் தேர்வு எழுத வரவில்லை. 170 பேர் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் காலை 7.30 மணியில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் தேர்வு மைய வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்து கடைசி கட்ட வாசிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். தாங்கள் படித்த பாடங்களை மீண்டும் புரட்டிப் பார்த்து தேர்வுக்கு தயாராகினர். தேர்வு தொடங்கும் முன்பு தேர்வு நடைமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்