நவராத்திரி இந்து சமய மக்களுக்கு மிகவும் முக்கியமான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் உள்ளன. சைத்ரா மற்றும் ஷரதிய நவராத்திரி தவிர இரண்டு குப்த நவராத்திரிகளும் உள்ளன. சைத்ரா நவராத்திரி மார்ச் அல்லது ஏப்ரலில் கொண்டாடப்படுகிறது, அதே சமயம் மகா நவராத்திரி செப்டம்பர் அல்லது அக்டோபரில் கொண்டாடப்படுகிறது.


நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும், இது நாடு முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. சைத்ர நவராத்திரி சைத்ர மாதத்தில் நிகழ்கிறது, இது இந்து சமய புத்தாண்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது. சைத்ரா நவராத்திரி என்பது சைத்ர மாத சுக்ல பக்ஷத்தில் அனுசரிக்கப்படுகிறது. 'நவ' என்றால் ஒன்பது மற்றும் 'ராத்திரி' என்றால் இரவு என்பதால், நவராத்திரி ஒன்பது நாட்கள் இரவுகளில் கொண்டாடப்படுகிறது.


சைத்ரா மாதத்தின் பிரதிபத திதி மார்ச் 21 அன்று காலை 10.52 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆண்டு, அது அடுத்த நாள், மார்ச் 22, 2023 அன்று இரவு 8.20 மணிக்கு முடிவடையும். சைத்ரா நவராத்திரி 2023 மார்ச் 22 அன்று தொடங்கி மார்ச் 30 அன்று முடிவடையும் என்று உதய திதி கணித்துள்ளது. வட இந்தியா முழுவதும், மக்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருந்து, ஒன்பதாம் நாளில், அவர்கள் கடவுளை வணங்கி சைத்ர நவராத்திரி சடங்குகளை முடிக்கிறார்கள்.


கதஸ்தாபன முஹூர்த்தம்


மார்ச் 22 அன்று பிரதிபத திதி காலை 8:20 மணி வரை மட்டுமே உள்ளது, அதனால், 22 மார்ச் அன்று கலச ஸ்தாபனத்துக்கான நல்ல நேரம் காலை 06.29 முதல் 07.39 வரை.


முதலில், பிரதிபத திதியில், அதிகாலையில் குளித்து, இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர், வழிபாட்டு தலத்தை அலங்கரித்து, ஒரு தூணுக்கு அருகே தண்ணீர் நிரப்பப்பட்ட கலசத்தை வைக்கவும். அதன் பிறகு கலசத்தை துணியால் மூடி விடவும். பின்னர், கலசத்தின் மேல், தேங்காய் மற்றும் அசோக இலைகளை வைக்கவும். தேங்காயை ஒரு சிவப்பு துணியில் கட்டி கலசத்தின் மேல் வைக்கவும். அதைத் தொடர்ந்து, விளக்கு ஏற்றி துர்கையை ஆவாஹனம் செய்து, சாஸ்திரப்படி துர்க்கையை வழிபடத் தொடங்குங்கள். 


நாடு முழுவதும்  வழிபாடு:


மகா நவராத்திரி விழாவானது நாடு முழுவதும் பெரும்  விமரிசையாகக் கொண்டாடப்படும். அதுவும், மேற்கு வங்கத்தில் பெரும் மாநில விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த நேரத்தில், அரசே பல்வேறு சிறப்பு விழாக்களை நடத்தும். தமிழகத்தில் கூட, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் நவராத்திரி விழா மிகவும் பிரசித்தப்பெற்றது. ஆனால், இந்த சைத்ரா நவராத்திரி, மகா நவராத்திரி போல் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதில்லை என்றாலும், இந்த சைத்ரா நவராத்திரி விழாவின் விரதங்களுக்கு பெரும்பலன் கிடைக்கும் என்று இந்து சமயத்தை பின்பற்றுவோர் நம்புகின்றனர். குறிப்பாக, வட இந்தியாவில், இந்த சைத்ரா நவராத்திரி விரதம் அதிகம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.