தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி தன்பாலீர்ப்பு கொண்ட நான்கு ஆண் தம்பதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதேபோல, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன.


ஆனால், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு மறுத்து வருகிறது. இதற்கிடையே, கடந்த 2018ஆம் ஆண்டு, தன்பாலின ஈர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் திரும்பப்பெற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. 


இந்த தீர்ப்புக்கு பிறகும், மாற்று பாலினத்தவர் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் இந்திய சமூகம் ஏற்று கொள்ள மறுக்கிறது என்றும் LGBT சமூகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்:


இந்நிலையில், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், இறுதி கட்ட விசாரணை ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று நடைபெற்ற விசாரணையில், தற்போது இந்த விவகாரத்தை விசாரித்து வரும் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, "இந்த விவகாரம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததால் இந்த விஷயத்தில் எடுக்கும் எந்த முடிவும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். யாருடைய விசாரணை நேரத்தையும் குறைக்க வேண்டும். இதை கருத்தில் கொள்ள வேண்டும்.


அரசியலமைப்பு சட்டத்தில் A 145(3) பிரிவை கருத்தில் கொண்டு, இந்த நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் இங்கு எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் அது பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, அதை அரசியல் சாசன அமர்வுக்கு முன் வைக்க உத்தரவிடுகிறோம்" என தெரிவித்தது.


"சட்ட விதிகளை மீறும் தன்பாலீர்ப்பாளர்களின் திருமணம்"


முன்னதாக, தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், "தன்பாலீர்ப்பாளர்கள் லிவிங் டு கெதரில் இருந்து பாலியல் உறவு கொள்வதை இந்திய குடும்ப அமைப்புடன் ஒப்பிட முடியாது. 


கணவன், மனைவி, குழந்தை அடங்கிய இந்திய குடும்ப அமைப்பை பொறுத்தவரையில், கணவன் என்ற ஆண், மனைவி என்ற பெண், இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை ஆகியோரை கொண்டதே குடும்ப அமைப்பாக கருத முடியும்.


தன்பாலீர்ப்பாளர்களின் திருமணத்தை பதிவு செய்வது சட்ட விதிகளை மீறுகிறது. திருமணம் என்ற கருத்தாக்கம், தவிர்க்க முடியாத எதிர் பாலினத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கிடையே ஒரு உறவை முன்வைக்கிறது.


இந்த வரையறை சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சட்டரீதியாகவும் திருமணத்தின் யோசனை மற்றும் கருத்தாக்கத்தில் வேரூன்றியுள்ளது. நீதித்துறை விளக்கத்தால் தொந்தரவு செய்யப்படவோ அல்லது நீர்த்துப்போகவோ கூடாது" என மத்திய அரசு தெரிவித்திருந்தது.