மாணவர்கள் கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளி வாழ்க்கையில் இருந்து கனவுகள் கொண்ட கல்லூரி வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள். கொண்டாட்டங்களும் விளையாட்டுகளும் இந்த காலகட்டத்தில் நிறைந்திருக்கும். அவற்றை அனுபவிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் வாழ்க்கையின் அடுத்தகட்டம் குறித்துத் திட்டமிடுவது.
பள்ளியில் இருந்து கல்லூரி சென்று சேரும்போதே, கல்லூரி எப்படிப்பட்டது, கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களின் தரம், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல அம்சங்களையும் கணக்கில் வைத்துதான் கல்லூரியைத் தேர்வு செய்திருப்பீர்கள். அதற்குப் பிறகு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
அங்கிருந்து வெற்றிகரமான கரியருக்கு என்னவெல்லாம் முக்கியம்? என்ன செய்ய வேண்டும்? பார்க்கலாம்.
சரியான இலக்கைக் கண்டறியுங்கள்
முதலில் உங்களுக்கு என்ன பிடிக்கும், என்ன வரும் என்பதைக் கண்டறியுங்கள். உங்களின் பெற்றோர், சகோதரர், நண்பர்களிடம் இதுகுறித்துப் பேசுங்கள். ஆசிரியர்களிடமும் இதுகுறித்து மனம் விட்டுப் பேசி, தெளிவு அடையலாம். சம்பந்தப்பட்ட பணிக்கு எதிர்காலம் என்ன, வேலைவாய்ப்பு பாதுகாப்பாக இருக்குமா என்பதைக் கண்டறியுங்கள்.
சுய மதிப்பீடு
முதலில் உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம். உங்களின் ஆளுமை, பலம், பலவீனம், பேரார்வம், இலக்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
* உங்களுக்கு முக்கியமானவை என்னென்ன? வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் முக்கியமானது எது?
* உங்களின் மென் திறன்கள் (soft skills) என்னென்ன?
* எப்படி பிறரிடம் பேசுவீர்கள்? இணைந்து பணிபுரிவீர்கள், பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள்? நேரத்தை நிர்வகிப்பீர்கள்?
* உங்களின் தொழில்நுட்பத் திறன்கள் என்ன? எதில் சிறப்பம்சத்துடன் இருக்கிறீர்கள்?
* இயற்கையாகவே உங்களுக்கு இருக்கும் திறமைகள் என்ன? எதையெல்லாம் ரசித்துச் செய்கிறீர்கள்?
* உங்களுக்கு எதிலெல்லாம் ஆர்வம்? என்ன செய்தால் உற்சாகம் அடைவீர்கள்?
* எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?
* அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் எங்கே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
மேலே கூறியவற்றுக்கு பதில் அளித்துக்கொள்வதன் மூலம், உங்களுக்கு என்ன மாதிரியான வேலையில் ஆர்வமும் திறமையும் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
நமக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய்த பிறகு, அதில் சம்பளம், வளர்ச்சி, பாதுகாப்பு, நிறுவனத்தின் பிராண்ட் உள்ளிட்ட சில அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.
* ஒரு வேலையைச் செய்வதில் என்னவெல்லாம் முக்கியம் என்று யோசியுங்கள். குறிப்பாக எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றீர்கள்?
* மீண்டும் எந்த அளவுக்குக் கற்று, வேலையில் முன்னோக்கிச் செல்ல ஆசைப்படுகிறீர்கள்?
* உங்களின் வேலை எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?
* நீங்கள் வேலை பார்க்கும் இடம்/ நிறுவனம் எந்த அளவுக்கு புகழ்பெற்ற, மதிப்புமிக்க நிறுவனம்?
* இவை எல்லாவற்றைக் காட்டிலும் நீங்கள் பார்க்கும் வேலையால், திருப்தியாக உணர்கிறீர்களா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதன் மூலம் கேரியரைத் துல்லியமாகத் திட்டமிடலாம்..
ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்
மாணவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் செம்மைப்படுத்துவதில் ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். நமக்கு அறிவு, திறன், நிஜ வாழ்க்கையின் அனுபவங்களைச் சொல்லித் தருபவர்கள். அவர்களிடம் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மனம் விட்டுப் பேசலாம். ஆலோசனைகளைக் கேட்டு அறியலாம்.
உதவித்தொகை
மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகைகள் மற்றும் தனியார் உதவித்தொகை எங்கெல்லாம் கிடைக்கும் என்பதைத் தேடிக் கண்டறிந்து அவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். உதவித் தொகைகளைப் பெறுவதன் மூலம் கல்விக்கு ஆகும் கட்டணம் கணிசமாகக் குறைவதோடு, தன்னம்பிக்கையும் கூடும்.
படிக்கும்போதே கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்வது முக்கியம். ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் எதையேனும் எடுத்துக் கொள்ளலாம்.
இன்டர்ன்ஷிப்
நாம் படிக்கும் படிப்பு தொடர்பான நிறுவனங்களில், இன்டர்ன்ஷிப் எனப்படும் உள்ளகப் பயிற்சியை எடுத்துக்கொள்வது முக்கியம். இதன்மூலம் வேலைக்குச் செல்லும் முன்பே பணி அனுபவத்தைப் பெற முடியும். அந்த அனுபவத்தைக் கொண்டு வேலைக்கு முயற்சிக்கலாம்.
பொதுவாக எந்த வேலைக்கும் communication என்னும் உரையாடும் திறன் முக்கியம். சொல்வதைத் தெளிவாக, தைரியமாக எடுத்துரைப்பது, ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வது, நேர்த்தியான உடைகள் மற்றும் அணிகலன்கள் மூலம் தோற்றத்துக்கு முக்கியத்துவம் ஆகியவற்றின் மூலம் வெற்றிப் பாதையை நோக்கி விரைவாகப் பயணிக்கலாம்.
இதையும் வாசிக்கலாம்: Positive College Experience: வசந்த காலம்...வருங்காலத்துக்கான அடித்தளம்: கல்லூரி வாழ்க்கைக்குள் நுழையும் முன் தெரிந்துகொள்ளவேண்டியவை
கல்வியோடு உடல் நலமும் மன நலமும் முக்கியம்! கல்லூரி மாணவர்களுக்கு சில முக்கிய டிப்ஸ்!