ஒரு மனிதனுக்கு உடல்நலம் எவ்வளவு முக்கியம் என்பது சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களோ மருத்துவமனைக்குச் செல்லும் போதுதான் தெரியும். ஒருவருக்கு கல்வி, செல்வம், புகழ், உறவுகள் என எல்லாமே இருந்தாலும் உடல்நலம் இல்லாவிட்டால் எதையுமே முழுதாக அனுபவிக்க முடியாது. இதில் உடல் நலம் என்பது உடல், மன நலம் இரண்டையுமே குறிக்கிறது.
வாழ்க்கையின் முக்கியமான பருவமான கல்லூரி காலகட்டத்தில் உடல், மன நலனைப் பேணுவது முக்கியமான ஒன்றாக அமைகிறது. இதை எப்படி மேற்கொள்ளலாம்?
சில எளிய டிப்ஸ்கள் இதோ!
உணவு, உறக்கம், உடல்பயிற்சி ஆகிய 3 காரணிகள் இதில் முக்கியமானவை. அவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
உணவு முறையில் பின்பற்ற வேண்டியது என்ன?
* ஊட்டச் சத்தான உணவுகளை முறையாக உட்கொள்ளுங்கள்.
* காலை உணவு கட்டாயம். அதை மட்டும் எப்போதுமே தவற விடாதீர்கள்.
* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம். கல்லூரிக்கு தண்ணீர் பாட்டிலை தாராளமாக எடுத்துச் செல்லலாம், தவறில்லை.
கல்லூரியில் சிற்றுண்டிகளை வாங்கி உண்ணும்போது, சத்தானவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கூடுமான வரையில் துரித உணவுகளைத் தவிர்க்கலாம். எப்போதேனும் ஆசைக்கு வாங்கி உண்ணலாம்.
உடற்பயிற்சி
* கல்லூரிக் காலத்தில்தான் தனிப்பட்ட நேரம் (Personal Time) அதிக அளவில் இருக்கும். திருமணத்துக்குப் பிறகு நமக்கான நேரம் என்பது குறையும் என்பதால், தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
* கல்லூரிக்குள் நண்பர்களுடன் சிறிது நேரம் நடக்கலாம். லிஃப்டுகளுக்கு பதிலாக மாடிப் படிகளையே பயன்படுத்த வேண்டும்.
* கல்லூரியில் உள்ள விளையாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி, நண்பர்களுடன் விளையாடலாம்.
* ஜிம் இருந்தால் அதையும் பயன்படுத்தலாம்.
உறக்கம்
* ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சம் 8 மணி நேர உறக்கம் அவசியம்.
* ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், படுத்துக்கொண்டே மொபைல் பார்ப்பது, சாப்பிட்டுக்கொண்டே பார்ப்பது தவிர்க்க வேண்டும்.
* இணையப் பயன்பாட்டுக்கு சுய கட்டுப்பாடு விதித்து, நேரத்துக்கு உறங்கச் செல்ல வேண்டும்.
* வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு படுப்பது, சீரான உறக்கத்தைக் கொடுக்கும்.
* டீ, காஃபி குடித்தவுடனே உறங்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
* அறையில் குறைவான வெளிச்சத்தை மட்டுமே படர விடுவது, மெலட்டோனின் சுரப்பை அதிகரித்து, விரைவான தூக்கத்துக்கு வழிகாட்டும்.
மன நலம்
* உடல் நலத்தோடு, மன நலமும் முக்கியமான காரணியாகும். ’’எனக்கு ரொம்ப ஸ்டெஸ்ஸா இருக்கு!’’- இந்த வார்த்தையை குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினரும் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மனநலத்தைக் கையாள்வதில், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
* நண்பர்களுடன் எல்லாவற்றுக்கும் போட்டி போடாதீர்கள். Peer Pressure -ஐத் தவிருங்கள்.
* எதார்த்தத்தை உணருங்கள். ’நம்மால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். படிப்பு, விளையாட்டு, கலை, சமூக செயல்பாடுகள் என எல்லாவற்றுக்கும் நேரம் போதாது. உங்களுக்குப் பிடித்ததை ஆத்மார்த்தமாகச் செய்யுங்கள். தேவைப்பட்டால் நண்பர்களிடம்/ ஆசிரியர்களிடம் உதவி கேளுங்கள், தவறே இல்லை.
* இயந்திரத்தனமாக, செய்யும் வேலைகளையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்காமல், சற்றே இடைவெளி எடுங்கள். நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள்.
* ஏதேனும் பிரச்சினை எனில், உங்களுக்கு நெருக்கமானவரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அது பெற்றோராகவோ, சகோதரர்களாகவோ, நண்பர்களாகவோ இருக்கலாம்.
* நமக்கு எப்போதுமே, எல்லாமே சிறந்தவையாகவே கிடைக்காது என்பதை நினைவில் வையுங்கள். கிடைத்ததை எப்படி சிறந்ததாக மாற்றுவது என்று யோசியுங்கள்.
* தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அது பிறரிடம் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும். உங்களை தன்னம்பிக்கை மிக்கவராக மாற்றும்.
சுகாதாரத்தைப் பேணுங்கள்
இவை தவிர்த்து, அடிக்கடி கைகளைக் கழுவுவது, கண்கள், மூக்கு, வாயைத் தொடாமல் இருப்பது, உடல்நிலை சரியில்லை எனில், குணமான பிறகு கல்லூரிக்குச் செல்வது ஆகிவற்றையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.
* ஹாஸ்டலில் இருக்கும் நண்பர்கள், குளிக்கும்போது காலணியைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். ஏனெனில் நிறைய நண்பர்களுடன் அறை பகிர்ந்துகொள்ளப் படும்போது சுகாதாரம் அவசியம்.
* நண்பர்களுடன் பார்ட்டிக்குச் செல்லும்போது கட்டுப்பாடு முக்கியம்.
உறவு நலம்
* உறவுகளைக் கையாள்வதில் கவனம் தேவை. யாரிடமும் அதீதமாக எதிர்பார்க்காதீர்கள். இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும்.
* விவாதங்களில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள்.
* யாராலும் எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்த முடியாது என்பதை உணருங்கள். உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அதுவே அழுத்தத்தில் இருந்து உங்களை விடுபட வைக்கும்.
* நீங்கள் செய்தது தவறெனத் தெரிந்தால் தயங்காமல் சென்று மன்னிப்பு கேளுங்கள்.
* மன அழுத்தத்தின் அறிகுறிகள் என்ன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
* இவை எல்லாவற்றையும் மீறி, மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக உணர்ந்தால், அதற்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சென்று ஆலோசனை பெறுங்கள்.
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் மாணவர்கள் பின்பற்றினால், கல்லூரி வாழ்க்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வாழ்க்கையே சிறக்கும்.