பள்ளி நேரங்களில் கோச்சிங் வகுப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிஹார் அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இப்போதெல்லாம் பள்ளிக்குச் செலவிடுவதை, நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகளுக்குத்தான் பெற்றோர்கள் அதிகம் செலவிட வேண்டியதாக இருக்கிறது. பள்ளி வகுப்புகளை கட் அடித்துவிட்டு, பயிற்சி மையங்கள் சென்று மாணவர்கள் படிப்பதையும் காண முடிகிறது. இதனால் பள்ளியின் அமைப்பு சிதைந்து விடும் என்று கல்வியாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 


இந்த சூழலில்,  பள்ளி நேரங்களில் கோச்சிங் வகுப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிஹார் அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதை மீறி செயல்படும் பயிற்சி மையங்கள் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பிஹார் மாநிலக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கே.பதக் கூறியதாவது:


‘’மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் தனியார் பயிற்சி மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட அரசு தடை விதித்துள்ளது. அதாவது பள்ளி நேரத்தில் நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகள் நடத்தப்படக் கூடாது. அவ்வாறு வகுப்புகளை நடத்தினால் பயிற்சி மையங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.  இதுகுறித்து மாநிலத்தில் உள்ள அனைத்து 38 மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 


பள்ளிக்கு வரும் மாணவர்கள் வருகையை உறுதிசெய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வருவது மோசமடைந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும். பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் 8 முதல் 16 வரை, இதுபற்றி ஆலோசனைக் கூட்டங்களை நடத்திக்கொள்ளலாம். அரசின் விதிமுறைகளை மீறி பயிற்சி மையங்கள் செயல்பட்டால், அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். பயிற்சி மையங்கள், பிஹார் மாநில பயிற்சி நிறுவனச் சட்டம் 2020-ஐப் பின்பற்றுவதில்லை. 


புதிய நேரக் கட்டுப்பாடு பற்றிக் கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 


* பள்ளி நேரத்தில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பயிற்சி மையங்கள் செயல்படக் கூடாது.


* இந்த நேரத்துக்கு இடைப்பட்ட வேளையில்தான் பயிற்சி அளிக்க முடியும். 


* அரசு அல்லது தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோச்சிங் வகுப்புகளில் கற்பிக்க அனுமதி கிடையாது. 


* பயிற்சி மையத்தில் ஓர் அரசு ஊழியர் பின்பற்றினால், அதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் ஆளிக்க வேண்டும்’’. 


இவ்வாறு பிஹார் மாநிலக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.கே.பதக் தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: UPSC SCHOLARSHIP EXAM 2023: யுபிஎஸ்சி தேர்வரா நீங்க? மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, பாடத்திட்டம் இதோ!