தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா மிகவும் பிஸியான ஷெட்யூலில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் மிகவும் நேர்த்தியாக தேர்ந்தெடுக்கும் தேசிய விருது பெற்ற நடிகரான சூர்யா, தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில்  நடித்து வருகிறார்.


மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் அடுத்த ஆண்டு உலகெங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 


பிஸி ஷெட்யூல் :


நடிகர் சூர்யா 'கங்குவா' படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனின் 'வாடிவாசல்' மற்றும் சுதா கொங்கரா உடன் மீண்டும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார். இது தவிர தயாரிப்பு பணிகளிலும் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இப்படி பிஸியாக ஷெட்யூல் போட்டு நடித்து வரும் சூர்யாவின் எவர்க்ரீன் திரைப்படம் ஒன்று தற்போது மீண்டும் ட்ரெண்டிங்காகி உள்ளது. 


 



பிளாக் பஸ்டர் மூவி:


2008ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்த சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் 'வாரணம் ஆயிரம்'(Vaaranam Aayiram). இப்படத்தில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் கலக்கியது. இன்றும் அவை பிளே லிஸ்டில் இடம்பெற்று இருக்கும் எவர்க்ரீன் சாங்ஸ். 


வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்த 'வாரணம் ஆயிரம்', தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் வெளியாகி அங்கும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றுள்ள இப்படம் நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக விளங்குகிறது. 


வாரணம் ஆயிரம் ரீ ரிலீஸ் :


'வாரணம் ஆயிரம்' (Vaaranam Aayiram) திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து இப்படம் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தில் 'சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன்' என்ற பெயரில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். திரையரங்குகளில் கூட்டம் அலைமோத எங்கும் 'ஹவுஸ்புல்' காட்சிகள் தான். இந்நிலையில் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன்' திரைப்படத்தில் இடம்பெறும் 'அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை' பாடலுக்கு தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் ஆடிப்பாடி மகிழும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


 






இது வரையில் எந்த ஒரு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தமிழ் டப்பிங் திரைப்படத்திற்கும் கிடைக்காத ஒரு வரவேற்பு 'சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன்' படத்திற்கு கிடைத்துள்ளது. இதைப் பார்க்கும் போது நிச்சயம் நடிகர் சூர்யா தெலுங்கு ரசிகர்களால் தத்தெடுக்கப்பட்ட செல்லப்பிள்ளை என்பது வெளிப்படையாக தெரிகிறது. தமிழ் ரசிகர்களை போலவே தெலுங்கு ரசிகர்களும் அவரைக் கொண்டாடுகிறார்கள்.