திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒடஞ்சமடை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை பழுதடைந்துள்ளாதால் பொதுமக்கள் மருத்துவமனை, மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும் பொதுமக்கள் தங்களின் தேவைக்கு வெளியே செல்வதற்கு முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த சாலையை, சீரமைத்து புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் கோரிக்கைகள் வைத்தனர். இதனைத் தொடர்ந்து "ரூபாய் 2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில்" ஐந்து கிலோமீட்டர் தூரம் கொண்ட தார் சாலை அமைப்பதற்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு செங்கம் "திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருணாநிதி" இந்த சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்று புதிய தார் சாலையை கடந்த வாரத்தில் போட தொடங்கினர். பின்னர் இரண்டு நாட்களில் புதிய தார் சாலை போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


 




இந்நிலையில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில் அந்த சாலையை கை வைத்து பெயர்த்தெடுக்கும் நிலையில் தரம் இல்லாமல் அமைக்கப்பட்டது தெரியவந்தது. உடனே அப்பகுதி கிராம பெண்கள் , ஆண்கள் என அனைவரும் சாலையில் கை வைத்து ஜல்லிகளை பெயர்தெடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தரமற்ற தார் சாலை குறித்து ஒப்பந்த தாரரிடம் அப்பகுதி கிராம மக்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆனால் ஒப்பந்ததாரர் கருணாநிதி எந்தவித பதிலும் அளிக்காமல் அலட்சியமாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமைக்கப்பட்ட தார்சாலை ஒரு மழை வெள்ளத்திற்கு கூட தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு தரமற்ற தார் சாலைகளை ஒப்பந்ததாரர் அமைத்துள்ளார்.


 




 


திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கருணாநிதி அரசு விதிமுறைகளை மீறி தரமற்ற முறையில் தார் சாலைகளை அமைத்துள்ளதாகவும், பொது மக்களுக்கு தமிழக அரசு சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நிதிகளை அதிக அளவில் ஒதுக்கினாலும், இது போன்ற அரசு ஒப்பந்ததாரர்கள் கிராம பகுதிகளுக்கு தரமற்ற சாலைகளை அமைத்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக மாற்றுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்து மேலும் தரமான புதிய சாலையை அமைத்து தர வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு சொந்த மாவட்டத்திலேயே தரமற்ற சாலை அமைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.