மலையாளத் திரையுலகில் தனக்கென தனி பாணியை உருவாக்கி அதன் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவை தன் பக்கம் ஈர்த்தது மட்டும் இல்லாமல், மலையாளம் தாண்டி தமிழ், தெலுங்கு என தான் கால்பதித்த இடங்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகர் ஃபகத் ஃபாசில். தெலுங்கில் அவர் ”புஷ்பா” என்ற ஒரு படம் மட்டும் நடித்திருந்தாலும், அந்த காதாப்பாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளி இருப்பார். 

 

தமிழ் சினிமாவில் அவர் சில படங்கள் நடித்திருந்தாலும், அதில் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்திய கதாபாத்திரம் மாமன்னன் படத்தின் ரத்தினவேலு கதாப்பாத்திரம்தான். இப்படத்தின் கதை, திரைக்கதை ஒரு பலம் என்றால் மற்றொரு பலம் ஃபகத் ஃபாசில் கதாப்பாத்திரம். அப்படியான கதாபாத்திரத்தினை சரியாக உள்வாங்கமல் ஒருவர் நடித்திருந்தால், படம் படு சொதப்பல் ஆகியிருக்கும். 

 



அப்படியான கதாப்பாத்திரத்தின் மூலம் திரையை அலங்கரித்த ஃபகத் ஃபாசிலுக்கு இன்று 41-வது பிறந்த நாள். அவருக்கு  இயக்குநர் மாரி செல்வராஜ் தனது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ”வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.



மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர். அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்” என குறிப்பிட்டுள்ளார். 



 

இயக்குநர் மாரி செல்வராஜ் மட்டும் இல்லாது, மாமன்னன் படக்குழுவும், தமிழ் திரையுலகில் பலரும், ஃபாகத் ஃபாசிலின் நடிப்பைக் கொண்டாடக்கூடிய  ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்கள் டிவிட்டரில் இந்திய அளவில் தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.