மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “பட்டியலின, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மகளிர் உரிமைத் தொகைக்கு  ஒதுக்கியிருந்தால் அது, சட்டப்படி குற்றம். பாதிக்கப்பட்ட மக்களுடைய பணத்தை விதியை மீறி ஒதுக்கினால், அது தவறு.




தஞ்சையில் குறுவை நெல் சாகுபடி முழுமையாக கருகி இருக்கிறது. அதற்கு முழுமையான காரணம் தற்போது ஆண்டுகொண்டிருக்கிற தி.மு.க., அரசு தான் முழு காரணம். ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்திலும் கர்நாடக அணையில் இருந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படியும், காவிரி நடுவர் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலும் நமக்கு வழங்க வேண்டிய 16-டி.எம்.சி., 32 டி.எம்.சி., நீரை விடுவிக்காத சூழலில் தான் தஞ்சை தரணி கருகும் சூழ்நிலைக்கு காரணமாக உள்ளது. இதற்கு அரசு பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என அ.தி.மு.க., சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இன்றைக்கு என்.எல்.சி., விவகாரத்தில் பயிர்கள் அழிக்கப்பட்டதற்கு நீதி ன்றம் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது.




அதே  பாணியில் தஞ்சை மண்ணில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏக்கருக்கு இழப்பீடாக 40 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. 2007-ல் காவிரி நடுவர் இறுதி தீர்ப்பு 18 ஆண்டுக்கு பின் கிடைத்தது. அப்போது ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில்  அப்போது ஆட்சியில் இருந்த  கருணாநிதி அவர்களுக்கு பத்திரிகை வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். அதில்..,” பெற்ற நீர் போதாது. அதே போல் பெற்ற தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசிடம் அரசாணை பெற்றுத் தரவேண்டும் அப்போது தான் நடைமுறைக்கு வரும்” என்றார்.




ஆனால் துரைமுருகன் சட்டத்தில் இடம் இல்லை என்றார். கர்நாடாக அரசு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து பெங்களூருக்கு கூடுதலாக நீரை பெற்றது. ஆரம்பித்தில் இருந்தே இப்படி காவிரி விவகாரத்தில் மெத்தனமாக தி.மு.க., நடந்து கொண்டதால் பயிர்கள் கருகும் சூழல் ஏற்பட்டுள்ளது. காவிரி இறுதி தீர்ப்பிற்காக உச்சநீதிமன்றம் சென்று போராடி அரசாணை பெற்றார் ஜெயலலிதா அவர்கள். ஆனால் இந்த வரலாறுகளை மறைத்துவிட்டு அமைச்சர் துரை முருகன் எங்களுக்கு வரலாறு தெரியவில்லை என சாடியுள்ளார். அதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.