அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவை 50% உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்


அண்ணா பல்கலைக்கழகம்


தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விகளுக்கான பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.


அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள் பல்வேறு காலகட்டங்களில் தொடங்கப்பட்டன. காஞ்சிபுரம், திண்டிவனம் ,ஆரணி, ராமநாதபுரம், திண்டுக்கல், திருக்குவளை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோன்று பல்வேறு மண்டலங்களிலும், அண்ணா பல்கலைக்கழக மண்டல கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லுரிகளில் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவை 50% உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இந்த கட்டண உயர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எந்தெந்த படிப்புகளுக்கு எவ்வளவு கட்டண உயர்வு?


இளங்கலை  செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு இன்டர்னல் தேர்வுக்கு – ஒவ்வொரு தாளுக்கும் தலா ரூ.150 ஆக இருந்த தேர்வுக் கட்டணம், ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


இளங்கலை ப்ரொஜெக்ட் தீசிஸ்-க்கு தேர்வுக் கட்டணம் 300 ரூபாயாக இருந்தது. தற்போது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


அதேபோல முதுகலை செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வு, இன்டர்னல் தேர்வு, மினி ப்ரொஜெக்ட், கோடைக்கால ப்ரொஜெக்ட் ஆகிய அனைத்துக்கும் தாள் ஒன்றுக்கு முன்பு தேர்வுக் கட்டணம் 450 ரூபாயாக இருந்தது. அது தற்போது 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


அதேபோல முதுகலை ப்ரொஜெக்ட் வேலைக்கு, ஒவ்வொரு கட்டத்துக்கு 600 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


இதை வாசிக்க: 12th Public Exam Time Table: மார்ச் 1 முதல் 22 வரை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் இவைதான்- அட்டவணையோடு! 


சான்றிதழ் கட்டணமும் உயர்வு


தேர்வுக் கட்டணத்துடன் சான்றிதழ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, இளங்கலை மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், டிகிரி சான்றிதழ் ஆகியவற்றைப் பெற முன்பு 1000 ரூபாய் கட்டணமாக இருந்தது. இந்தக் கட்டணம் 1500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முதுகலை படிப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், டிகிரி சான்றிதழ் கட்டணமும் 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


இவை தவிர்த்து, தன்னாட்சி அதிகாரம் பெறாத கல்லூரிகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், டிகிரி சான்றிதழ் ஆகியவற்றை டிஜி லாக்கர் செயலியில் பதிவேற்றம் செய்யும் ஆன்லைன் சேவைக்கு புதிதாக ரூ.1,500 கட்டணம் செலுத்தப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.  


இதற்கிடையே தேர்வுகள் மற்றும் சான்றிதழுக்கான கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதையும் வாசிக்கலாம்: கல்வித்துறைக்கும் ஆளுநருக்கும் என்ன பிரச்சினை? திருப்பி அனுப்பிய மசோதாக்கள் சொல்லும் ரகசியம் என்ன?