ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. தொடக்கத்தில் குறைவான மழையே பெய்தாலும், கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியபோதை அரபிக் கடலில் தேஜ் புயலும், காற்றழுத்தமும் உருவானது. தேஜ் புயலால் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மழை பெய்தது. குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், தற்போது 'மிதிலி' என்ற புயல் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவானது 'மிதிலி’ புயல்:
அதாவது, நேற்று முன்தினம் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (நவம்பர் 16) அதிகாலை 05.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 08.30 மணி அளவில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கே, பரதீப்பிலிருந்து (ஒரிசா) சுமார் 320 கிலோ மீட்டர் தென்-தென்கிழக்கே, டிகாவிலிருந்து (மேற்கு வங்கம்) சுமார் 460 கிலோ மீட்டர் தென்–தென்மேற்கே, கேப்புபாராவிலிருந்து (வங்கதேசம்) சுமார் 610 கிலோ மீட்டர் தென்–தென்மேற்கே நிலை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அதாவது, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவாகி இருக்கிறது. இந்த புயலுக்கு 'மிதிலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் ஒடிசாவில் இருந்து 190 கி.மீ தொலைவில் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவே வலுவிழந்து வரும் 18ஆம் தேதி வங்கதேச கடற்கரையை மோங்க்லா - கேப்புபாராவிற்கு இடையே கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இது புயலாக மாறியதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் தோன்றிய முதல் புயலாகும்.
தமிழ்நாட்டில் பாதிப்பு இருக்குமா?
இதற்கிடையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேலும், நவம்பர் 19ஆம் தேதி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.