தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட UPS-ன் தொழில்நுட்ப மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. சரக்கு போக்குவரத்து சங்கிலி மேலாண்மை நிறுவனம் சென்னையில் திறக்கப்பட்டதில் பெருமையடைகிறேன். தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுகிறது. அதனால் தான் அதிக முதலீடுகள் வருகிறது. இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக பல்வேறு தரவரிசை பட்டியலில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது” என பேசியுள்ளார். 


மேலும், “ முதலீடுகளை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகள் எடுத்து வருகிறது. முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான தொழில் பூங்கா உருவாகி வருகின்றோம். தமிழ்நாடு சரக்கு போக்குவரத்து கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து திட்டம் 2023 கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதற்காக மப்பேடு அருகே சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது, கோவையிலும் இது அமைக்கப்படும். தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சிக்கு ஏற்ப பயணம் மேற்கொள்வது அவசியம். ஏழை எளிய மாணவர்களுக்கும்  வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக tata technologies மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து 71 அரசு பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தியுள்ளது” என குறிப்பிட்டார். 


தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா காலக்கட்டத்தில் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அப்போது நிதி நெருக்கடி கடுமையாக இருந்தது. கொரோனாவையும் வென்றெடுத்தோம், நிதி நெருக்கடியையும் வென்றெடுத்தோம். 2022 - 23 ஆம் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி ரூ. 14,53,321 கோடியாகவும், வளர்ச்சி விகிதத்தில் 8.19% விழுக்காடாகும் உள்ளது. 2022-23 தமிழ்நாட்டில் பணவீக்க விழிக்காடு 5.97 % குறைந்துள்ளது. 2024 ஜனவரி மாதம் நடைபெறும் உலக முதலீட்டார் மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்” என கூறி உரையை நிறைவு செய்தார்.