தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2023-24ஆம் கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளும் விடுமுறை விடும் நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை குறித்து விளக்கமாகக் காணலாம். 


காலாண்டுத் தேர்வு எப்போது?


2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 4 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடங்கி, செப். 27 வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. செப். 28ஆம் தேதி காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல 1 முதல்  3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், செப். 23ஆம் தேதி தேர்வு விடுமுறை தொடங்க உள்ளது. தேர்வு முடிந்து அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 


டிசம்பரில் அரையாண்டுத் தேர்வு


1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11, 12ஆம் வகுப்புகளுக்கும் டிசம்பர் 11ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்குகிறது. அதேபோல டிசம்பர் 13ஆம் தேதி 6 - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிந்து விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 


நடந்து முடிந்த அலகுத் தேர்வு


10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான யுனிட் தேர்வு எனப்படும் அலகுத் தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெற்றது. 2ஆவது அலகுத் தேர்வு நாளை (ஆகஸ்ட் 29) முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் முதல் மிட்- டெர்ம் தேர்வு நடைபெற்றது. 


10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான ஒரு மதிப்பெண் தேர்வு டிசம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் ஜனவரி 8ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன. 10ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் ஜனவரி 22ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன.


முழு ஆண்டுத் தேர்வு எப்போது?


மார்ச் 18ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 8ஆம் தேதி 10ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதேபோல மார்ச் 19ஆம் தேதி 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. 


6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 3ஆவது வாரத்தில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு பள்ளி இறுதி வேலைநாளாக ஏப்ரல் 30ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.