சீமானை கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.


விஜயலட்சுமி பேட்டி:


புகாரளித்த பிறகு வேப்பேரியில் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விஜயலட்சுமி “திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து சீமான் ஏமாற்றி விட்டார். அவர் மீது கைது நடவடிக்கையை கோராமல் இருந்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அதனால் தற்போது அவரை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். அதிமுக ஆட்சியின் போது என்னிடம் தான் சமரச பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. சீமானிடம் விசாரணை நடத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் சீமானை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன” என கூறினார்.


என்ன பதில் சொல்ல போகிறார்?


தொடர்ந்து, திருமணம் செய்து கொள்வேன் என சீமான் எழுதி கொடுத்து இருக்கிறாரா என்ற கேள்விக்கு,  ”சீமான் என்னுடன் அரை நிர்வாணமாக இருந்தது போன்ற வீடியோக்களை காட்டியிருக்கிறேன். அதற்கு அவர் என்ன பதில் சொல்ல போகிறார். சீமானுக்கு இதுதான் வேலையா? அப்படியே வாழ்ந்துவிட்டு போவது தான் சீமானின் பழக்கமா? வீடியோவில் பொண்டாட்டி என பேசியுள்ளார். அதனை நான் வெளியிட்டுள்ளேன். பின்பு வந்து எழுதி கொடுத்தாரா என கேட்பது என்ன நியாயம்? என்னிடம் குறுக்கு கேள்விகளை கேட்பதற்கு பதிலாக சீமானிடம் கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் இது. அவரை கைது செய்யும் வரை ஓயமாட்டேன்” என பதிலளித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பியபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜயலட்சுமி அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.


நேற்று வெளியான வீடியோ..!


முன்னதாக நேற்று அவர் வெளியிட்டு இருந்த வீடியோவில் “சீமானை காப்பாற்றுவதற்காக என்னை துடி துடிக்க வைத்தனர். மிரட்டல்களை எல்லாம் தாண்டி மீண்டும் புகார் கொடுக்க உள்ளேன். எனக்கு நீதி கிடைப்பது என்பது மக்களுக்கு நீதி கிடைப்பது மாதிரி. எனக்கு ஆதரவாக இந்த ஆளும் அரசு. ஒரு பெண்னுக்கு ஆதரவாக ஆளும் அரசு இருக்கும் என்று நம்புகிறேன். மக்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பெண்கள் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.  நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். சீமான் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.


நடந்தது என்ன?


தமிழ் சினிமாவில் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து விஜயலட்சுமி பிரபலமானார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதைதொடர்ந்து,  இயக்குனர் மற்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்  உடன் அவர் பழகிவந்தார். திடீரென அவர்கள் பிரிந்த நிலையில் ”சீமான் தன்னை காதலித்தார். பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக்கொண்டு, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். பிறகு தன்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்” என கடந்த சில ஆண்டுகளாகவே விஜயலட்சுமி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.