அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 6000 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37, 211 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 48 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கல்வி கற்பிக்க சுமார் 2.3 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.


அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ நலனிற்காக பள்ளிகளில்‌ இணைய வசதிகள்‌, 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌, நான்‌ முதல்வன்‌, மாணவர்களின்‌ கற்றல்‌ திறனை அதிகரித்து தமிழகத்தின்‌ கல்வித்‌ தரத்தினை உயர்த்திட இல்லம்‌ தேடிக் கல்வி, நம்‌ பள்ளி நம்‌ பெருமை, எண்ணும்‌ எழுத்தும்‌, நம்ம ஸ்கூல்‌ பவுண்டேசன்‌, பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்பு திட்டங்கள்‌, பள்ளிகளின் வகுப்பறைக்‌ கட்டடங்கள்‌, குடிநீர்‌ வசதி, கழிவறைகள்‌, மின்சாதன வசதிகள்‌ போன்ற அடிப்படைக்‌ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்‌, திறன்‌ வகுப்பறைகள்‌ அமைத்தல்‌, காலியாகவுள்ள ஆசிரியர்‌ பணியிடங்களை நிரப்புதல்‌ போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.


காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்


எனினும் ஆசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாததால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டும் எழுந்தவண்ணம் உள்ளன. கொரோனா காலத்தில் குழந்தைகளின் கற்றலும் பாதிப்புக்கு உள்ளாகியது.


இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 1,000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளிகளில் சுமார் 1,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும், தொடக்கப் பள்ளிகளில் சுமார் 2000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நடுநிலைப் பள்ளிகளிலும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


முக்கியமான பாடங்கள் (Core Subjects) என்றில்லாமல், அனைத்துப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆசிரியர்களின் பணி நியமனங்கள் இருக்கும் என்று கல்வி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு எப்படி?


ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பல்லாயிரக்கணக்கானோர் வேலை இல்லாமல் காத்திருக்கின்றனர். அவர்களில் தகுதியானவர்கள் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மீண்டும் பணி நியமனத்துக்கான தேர்வு நடத்த்பப்படுவதற்கு ஆசிரியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


இதையும் வாசிக்கலாம்: Model Syllabus: பின்வாங்கிய அரசு: தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம்; கல்லூரி நிர்வாகமே முடிவு செய்யலாம் என அறிவிப்பு