நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் நேற்று பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார். அதில், மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி போதுமான அளவு பேசவில்லை என்றும் எதிர்க்கட்சிகளை குறிவைப்பதிலேயே அவரின் உரை அமைந்திருந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.


இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி அளித்த பதில் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். மணிப்பூர் சீரியசான விவகாரம் என்றும் அது தொடர்பான விவாதத்தில் பிரதமர் ஜோக் அடிச்சிருக்கக் கூடாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


"பிரதமர் செய்யும் செயலா?"


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் சுமார் 2 மணி 13 நிமிடங்கள் பேசினார். இறுதியில், மணிப்பூர் குறித்து 2 நிமிடம் மட்டுமே பேசினார். மணிப்பூர் பல மாதங்களாக எரிந்து கொண்டிருக்கிறது, மக்கள் கொல்லப்படுகிறார்கள், பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. ஆனால், விவாதத்தில் பிரதமர் சிரித்து பேசுகிறார். ஜோக் அடிக்கிறார். இது பிரதமர் செய்யும் செயல் அல்ல.


இந்திய ராணுவத்தால் இந்த முட்டாள்தனத்தை 2 நாட்களில் நிறுத்த முடியும். ஆனால், மணிப்பூர் தொடர்ந்து எரிவதை பிரதமர் விரும்புகிறார். தீயை அணைக்க விரும்பவில்லை. 19 வருட அனுபவத்தில் மணிப்பூரில் நான் பார்த்ததையும் கேட்டதையும் பார்த்ததே இல்லை. பிரதமரும் உள்துறை அமைச்சரும் பாரத மாதாவை கொன்றிருக்கிறார்கள். மணிப்பூரில் இந்தியாவை அழித்திருக்கிறார்கள் என நாடாளுமன்றத்தில் பேசினேன்.


"அற்ப அரசியல்வாதி போல் பேசக்கூடாது"


இவை வெற்று வார்த்தைகள் அல்ல. மணிப்பூரில், மெய்தேயி  சமூக மக்களின் பகுதிக்குச் சென்றபோது, ​​எங்கள் பாதுகாப்புப் பிரிவில் குக்கி சமூகத்தை சேர்ந்தவர் இருந்தால், அந்த நபரைக் கொன்றுவிடும், இங்கு அழைத்து வரக்கூடாது என்று சொன்னார்கள். குக்கி சமூக மக்கள் வாழும் பகுதிக்கு போனபோது, ​​மெய்தேயி சமூகத்தவரை அழைத்து வந்தால் அவர்ககளை சுட்டு வீழ்த்துவோம் என்று சொன்னார்கள். எனவே, அது ஒரு மாநிலம் அல்ல. இரண்டு மாநிலங்களாக பிளவுப்பட்டு கிடக்கிறது. மாநிலம் கொலை செய்யப்பட்டு பிளவுப்பட்டு கிடக்கிறது.


பிரதமர் குறைந்தபட்சம் மணிப்பூருக்குச் சென்று, மக்களிடம் பேசி, நான் உங்கள் பிரதமர் உங்களுடன் இருக்கிறேன் என நம்பிக்கை வார்த்தை கூறலாம். பேசலாம். ஆனால், அவருக்கு இம்மாதிரியான நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. 2024இல் பிரதமர் மோடி பிரதமராவாரா என்பது கேள்வி அல்ல. மணிப்பூர் பற்றியதுதான் கேள்வி. அங்குதான், குழந்தைகள், மக்கள் கொல்லப்படுகிறார்கள்.


பிரதமர் பிரதமரானதும், அவர் அரசியல்வாதியாக இருக்க கூடாது. நாட்டின் குரலின் பிரதிநிதியாக மாற வேண்டும். அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, பிரதமர் அற்ப அரசியல்வாதி போல் பேசாமல், தன் பின் இந்திய மக்கள் இருப்பதை உணர்ந்து பேச வேண்டும். நரேந்திர மோடி இப்படி பேசுவது வருத்தமாக இருக்கிறது. பிரதமர், தான் யார் என்பதையே புரிந்து கொள்ளவில்லை" என்றார்.