ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில், சிறுவர்களிடம் ஆபாசமாக பேசிய புகாரில் யூட்யூப் புகழ் மதன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கோரி பப்ஜி மதன்சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பப்ஜி மதனின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே வேளையில், 8 மாத கைக் குழந்தையுடன் சிறையில் இருந்த மதனின் மனைவி கிருத்திகாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மதனின் ஆபாச உரையாடல் விவகாரங்களுக்கு கிருத்திகா உடந்தையாக  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 






முன்னதாக, ஆபாச வார்த்தைகள் மூலம் ஆன்லைன் ஸ்ட்ரிமிங் பப்ஜி விளையாடி பணம் சேர்த்து வந்த யூடியூப்பர் மதன் மீது வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை தேடி வந்தனர். அவரது சொந்த ஊர் சேலம் என்பதும், சென்னை பெருங்களத்தூரில் தங்கி இருக்கிறார் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பெருங்களத்தூர் விரைந்த போலீஸ், அவரது தந்தை மாணிக்கம் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோர் மட்டுமே இருக்க, அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதனின் யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா நிர்வாக அதிகாரியாக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிருத்திகாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் அசைவ உணவகம் ஒன்றை மதன்குமார் நடத்தியுள்ளார். இதற்காக வங்கி மற்றும் நண்பர்களிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த அளவு உணவகத்தில் வருவாய் இல்லை. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்த மதன், கடைக்கு வாடகை கூட கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வாடகை பாக்கி இருந்த போதே மதன் தலைமறைவாகியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த வாடகை பாக்கி ரூ.2 லட்சம். அந்த கட்டடத்தின் உரிமையாளரான கஜபதி என்பவர், அம்பத்தூர் காவல்நிலையத்தில் அது தொடர்பாக புகார் அளித்து, அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. அதன் பிறகு தான், மதன் தீவிரமாக பப்ஜி விளையாட்டில் இறங்கி பணம் பார்க்கத்துவங்கியுள்ளார். தனது உருவத்தை வெளியிட்டால் தன்னை தேடும் கடன்காரர்கள் மற்றும் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதற்காக தான், தன்னை அடையாளம் தெரியாத நபராக கடைசி வரை காட்டிக்கொள்ள முயற்சித்திருக்கிறார். கடைசியில் அது தான் தனது தொழிலுக்கும் பாதுகாப்பு என கருதி, அதை தனது அடையாளமாகவும் மாற்றிக்கொண்டார் என்கிற விபரம் தெரியவந்தது. 


Lady argument : நான் தானே சாவறேன்.. உனக்கு என்ன? காவலரைக் கடுப்பேத்திய பெண்..



தலைமறைவாக இருந்த மதன் தர்மபுரியில் வீடு ஒன்றில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு ரகசியமாக சென்று குற்றப்பிரிவு போலீசார், பதுங்கியிருந்த மதனை கையும் களவுமாக பிடித்தனர். போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த மதன், போலீசார் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். தான் செய்தது தவறு தான் என்றும், தன் மீதான குற்றங்களை ஏற்றுக்கொள்வதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய பின், சிறையில் அடைக்கப்பட்டார்.