தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரு மாத காலத்துக்கு மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால், ஆழ்கடலில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதற்கு அரசால் தடை விதிக்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 15-ம் தேதி வரையிலான 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் செயல்படுத்தப்பட்டது.
இந்தத் தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள சுமார் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள பல ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாது. தமிழகத்தின் வட மாவட்டமான திருவள்ளூர் முதல், தெற்கில் கன்னியாகுமரி வரை தமிழ்நாடு அரசால் இத்தடைக் காலம் செயல்படுத்தப்படுகிறது. தடையை மீறி மீன் பிடிப்பவர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம், 1983, பிரிவு 5-ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். எனினும், கட்டுமரப் படகுகள், ஃபைபர் படகுகள், மோட்டார் அல்லாத படகுகள், நாட்டுப் படகுகள் 3,4 கடல் நாட்டிக்கல் மைலுக்குத்தான் செல்ல முடியும் என்பதால், அந்தப் படகுகள் மூலம் மீன் பிடிக்க இக்காலத்தில் தடை ஏதும் இல்லை.
இந்தத் தடைக் காலத்தில் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள சுமார் 1 லட்சத்தி 20 ஆயிரம் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 5,000 ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிறது. இந்தத் தடைக் காலத்தில் வலைகளைச் சரிசெய்தல், படகுகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவர். மேலும் இந்தத் தடைக் காலத்தால் கரையோரம் படகுகள் மட்டுமே மீன்பிடிப்பதால் குறைவான அளவில் கிடைக்கும் என்பதால் மீன்களின் விலையும் உயர்ந்திருக்கும்.
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 61 நாட்கள் கழித்து கடந்த 15-ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மடவாமேடு மீனவ கிராமத்தில் ஃபைபர் படகு மூலம் கடலுக்கு சென்றனர். மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்கள் வலையில் அதிக அளவில் மத்தி, சூரை, சீடி வகை மீன்கள் கிடைத்துள்ளது. இவ்வகை மீன்கள் அதிகளவு கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கிலோ மத்திமீன் 130 ரூபாய் சூரை 200 ரூபாய், சீடி 120 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். மேலும் மீன்கள் பெருமளவு கேரளாவில் உணவிற்காகவும், மீன் எண்ணெய் தயார் செய்யவும் பயன்படுகின்றன.
அதிக அளவிலான மத்தி,சூரை உள்ளிட்ட மீன்கள் இப்பகுதிகள் பிடிபடுவதையடுத்து, டன் கணக்கில் பிளாஸ்டிக் பெட்டிகளில் முறையான ஐஸ் பேக்கிங் செய்து, கண்டெய்னர் லாரிகள் மூலம் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனால் அதிக லாபம் கிடைப்பதாக இப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.