பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளையும்  தனது ரசிகர்களாக பெற்றிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் திரைப்படம்  “டாக்டர்”. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. படத்தில் பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தவிற யோகி பாபு, வினய் உள்ளிட்ட ஏராளமான நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.மேலும் சிவாவின் நண்பர் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மார்ச்  மாதமே இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் அப்போது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது படக்குழு. கடந்த மே மாதம் 11 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், படம் வெளியிடப்படாமல் முடங்கி போனது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் படம் மீண்டும் திரையரங்கம் திறந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓடிடியில் வெளியிடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



இதற்காக டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் “டாக்டர்” தயாரிப்பு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ஓடிடி மட்டுமல்லாது தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையயும் தங்களுக்கு வழங்குங்கள் என டிஸ்னி + ஹாட்ஸ்டார் தரப்பில்  கேட்டதாக தெரிகிறது. ஆனால் படத்தில் தொலைக்காட்சி உரிமையை முன்னரே சன் தொலைக்காட்சிக்கு வழங்கி விட்டாதால் அதனை வழங்க படக்குழுவினர் மறுத்துவிட்டனர். இதனால் இரு தரப்புக்கும்  இடையில் சற்று மௌன நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியிடலாம் என முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் படக்குழு அதனை மறுத்துள்ளது. இந்நிலையில் படம் தமிழ், மலையாளம்,தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


 



தமிழ் சினிமாவில் விஜய் , அஜித், ரஜினி, கமல் போன்றே சிவகார்த்திகேயனின் படங்களும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டி கொடுத்துவிடும். தொகுப்பாளராக களமிறங்கிய சிவகார்த்திகேயன் இன்று வியாபார நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.  இவரது நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்கள்  தயார் நிலையில் உள்ளன. இதில் அயலான் வருகிற டிசம்பர் மாதம் திரையரங்கு வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இதற்கடுத்ததாக சிவகார்த்திகேயன் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ”டான்” திரைப்படத்தை தயாரித்து வருகின்றன. இது தவிர சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 5 படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக பயங்கரமான சம்பளத்தொகையை (75 கோடி) கேட்டதாகவும் கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.