கர்நாடகாவில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த இளைஞருக்கு ஊர் மக்கள் கொடுத்த வரவேற்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கர்நாடகாவில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அங்குள்ள பெலகாவி மாவட்டத்தின் பைலேஒங்கலா என்ற தாலுகா உள்ளது. இதில் உள்ள கிராமங்களில் ஒன்றான தொட்டவாடாவில் வசித்து வரும் தம்பதியினருக்கு 18 வயது கூட நிரம்பாத மகள் இருக்கிறாள். 


அந்த சிறுமி அந்த கிராமத்துக்கு அருகில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக தொட்டவாடா கிராமத்தைச் சேர்ந்த அனில் என்ற இளைஞரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானார். சிறுமியை தனியாக அழைத்துச் சென்று இத்தகைய செயலில் ஈடுபட்டதை அறிந்த சிறுமியின் பெற்றோர், இதுதொடர்பாக பைலேஒங்கலா புறநகர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவில் புகாரளித்தனர். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அனிலை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஹிண்டல்கா சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 3 மாத சிறை தண்டனைக்குப் பின் அனிலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 


சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு ஜாமீன் கிடைத்த தகவல் தொட்டபெடா கிராம மக்களுக்கு கிடைத்தது. ஜாமீனில் வெளியே வந்த அனில் மீண்டும் தன்னுடைய கிராமத்துக்கு திரும்பினார். ஏற்கனவே அவர் வருவதை அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் அனிலுக்கு தக்க பாடம் புகட்ட எண்ணினர். அதன்படி கிராமத்துக்குள் நுழைந்த அவருக்கு சிறுமியின் குடும்பத்தினரால் சரமாரியாக அடி விழுந்தது. செருப்பால் தாக்கியும், செருப்பு மாலை அணிவித்தும் அக்கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாக ஊர்வலமாக அனில் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை சிலர் தங்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.




மேலும் படிக்க: Crime: டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை - கேரளாவில் அதிர்ச்சி