மக்களவை தேர்தல் 2024க்கான தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது. துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. 


வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாகச்  சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. தபால் வாக்குகளை செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்ரல் 8ம் தேதி மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


ஈரோடு தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 21,805 பேரும், 9,824 மாற்றுத்திற்னாளி வாக்காளர்களும் உள்ளனர். அதில், 2,201 முதியவர்களும், 800 மாற்றுத்திறனாளிகலும் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விருப்பம் தெரிவித்த 3,001 பேரிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 


மக்களவை தேர்தல் 2024:


அடுத்த 5 ஆண்டுகள் நம்மை மத்தியில் எந்த கட்சி ஆட்சி செய்ய போகிறது என்று தெரிந்துகொள்ள, இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.


தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக, அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்தும் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று மக்களவை தேர்தலை சந்திக்கின்றன. கடந்த சில தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜக, இந்தமுறை பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. எனவே, இந்த முறை யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை கணிக்க முடியவில்லை. 


இந்தநிலையில், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலின்போது நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களிப்பது கடினமாக இருக்கும். எனவே, இதையடுத்து, தமிழ்நாட்டில் இவர்களுக்கு ஏதுவாக இன்று முதல் வருகின்ற 6ம் தேதி வரை தபால் வாக்குப்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு வருகின்ற 8ம் தேதி மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


தபால் வாக்கு:


தகுதியுள்ள வாக்காளர்கள் நேரில் வாக்களிக்க முடியாவிட்டாலும், அவர்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதில் தபால் வாக்குச் சீட்டுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளிலிருந்து தபால் வாக்குகள் தனித்தனியாக எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் நாளில், தபால் ஓட்டுகள் தேர்தல் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு, எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்படும். தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை அவற்றின் செல்லுபடியாகும் தன்மையை ஆராய்ந்து, யாருக்கு வாக்கு அளித்தார்களோ, அவர்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் கணக்கிடப்படும். 


தபால் வாக்கு செலுத்த விண்ணப்பிப்பது எப்படி..? 


தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்க, தகுதியான வாக்காளர்கள், அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (RO) விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் பொதுவாக தனிப்பட்ட விவரங்கள், வாக்காளர் அடையாளத் தகவல் மற்றும் தபால் வாக்குச் சீட்டைக் கோருவதற்கான காரணம் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். இதையடுத்து, தேர்தல் அதிகாரி விண்ணப்பதாரரின் தகுதியை சரிபார்த்து, நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தபால் வாக்கு செலுத்த தகுதியானவர்கள் என்று அறிவிக்கும்.