ஷாக் வீடியோ:


கர்நாடகா மாநிலம் மங்களூருவில் மன்னகுடா என்ற பகுதியில் இருக்கும் நடைபாதையில், வழக்கம்  போல் மக்கள் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, நேற்று மாலை 4 மணியளவில் அந்த சாலையில், வெள்ளை நிற ஹூண்டாய் இயான் கார் ஒன்று திடீரென நடைபாதையில் ஏறியது. அந்த நேரத்தில், நடைபாதையில் இரண்டு பெண்கள், 3 சிறுமிகள் என்று சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த கார் அவர்கள் மீது மோதிவிட்டு, மின்கம்பியை உடைத்துக் கொண்டு வேகமாக கடந்துச் சென்றது. இந்த காட்சிகள் அனைத்து அங்கிருந்த சிசிடிவி கேமாராவில் பதிவானது. சுமார் 6 விநாடிகளில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. 






இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஒரு பெண் மட்டும் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். உயிரிழந்தது 23 வயதான ரூபஸ்ரீ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து பேசிய போலீசார், "விபத்து ஏற்படுத்திய காரை மலேஷ் பல்தேவ் என்பவர் ஓட்டிச் சென்றிருக்கிறார். விபத்து ஏற்படுத்தியதற்கு பிறகு காரை ஒரு ஷோரூம் முன்பு நிறுத்திவிட்டு, தனது வீட்டிற்கு சென்று அவரது தந்தையை அழைத்துக் கொண்டு காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


அதிகரிக்கும் சாலை விபத்துகள்:


இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.


2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.