இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ(LEO) படத்தை அதிக பணம் கொடுத்து டிக்கெட் பெற்று பார்க்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த லியோ திரைப்படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த கூட்டணி மாஸ்டர் படத்துக்குப் பின் 2வது முறையாக இணைந்துள்ளது. தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில் லியோ படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி என இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படியான நிலையில் லியோ படத்துக்கான ஒரு வார டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படுகிறது. ஆனால் கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டதால் மாநில எல்லையில் உள்ள ரசிகர்கள் அந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் லியோ படத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்காமல் ரசிகர்கள் திண்டாடி வருகின்றனர். சென்னையில் மட்டும் முதல் நாளில் 1600 காட்சிகள் திரையிடப்படுகிறது.
அதேசமயம் லியோ படத்துக்கான டிக்கெட்டுகள் வெளிச்சந்தையில் கொள்ளை லாபத்திற்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 200 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை நேரத்துக்கு நேரம் ரேட்டை ஏற்றி கிட்டதட்ட ரூ.2 ஆயிரம் வரை விற்று ஒரு கும்பல் செயல்படுவதாக வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். பேஸ்புக்கில் உள்ள சந்தைப்படுத்துதல் பகுதியில் பலரும் லியோ படத்தின் டிக்கெட்டை விற்று வருகின்றனர்.
இப்படியான நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “லியோ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் விலை கொடுத்தாவது பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்க ரசிகர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு,” அப்படி டிக்கெட் வாங்காதீங்க என்று கண்டிப்பாக சொல்வேன். சினிமா ஒரு பொழுதுபோக்கு அவ்வளவு தான். நம்முடைய வேலைகளுக்கு நடுவே இரண்டரை மணி நேரம் நம்மை உற்சாகமாக வைக்க பார்ப்பது. அதற்கு இவ்வளவு முக்கியத்தும் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்க வேண்டும் என்பது அவசியல் இல்லை. டிக்கெட் தட்டுப்பாடு இருப்பது உண்மை தான். நான் டிக்கெட் கேட்டதுக்கே இல்லைன்னு சொல்லிட்டாங்க. பொறுமையாக அடுத்த ஷோ பார்த்துக்க வேண்டிதான்” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ALSO Read | LEO Twitter Review: “விஜய் - லோகேஷ் கனகராஜின் தரமான சம்பவம்” .. லியோ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!