விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் மயிலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் சாராய வேட்டையில் ஈடுபடுவதற்காக மாறுவேடத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மயிலம்- புதுச்சேரி சாலையில் பெரும்பாக்கம் ஆவின் பாலகம் அருகே சென்ற போது, அங்கு நின்ற வாலிபர் ஒருவர், அவர்களை வழிமறித்தார். பின்னர் அவர்களிடம், அந்த வாலிபர் தான் போலீஸ், உங்கள் வாகனத்தின் உரிமம், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை காட்டுங்கள் என்று கூறியுள்ளார்.
ஆவணங்கள் இல்லையென்றால் ரூ.1,000 கொடுங்கள் என்று கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மயிலம் அருகே பெரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் சாம்ராஜ் (வயது 32) என்பதும், அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் போலீஸ் எனக்கூறி வசூலில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து சாம்ராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3,350 ரூபாயை பறிமுதல் செய்தனர். போலீஸ் என கூறி மாறு வேடத்தில் இருந்த போலீசாரிடமே வாலிபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் மதுபாட்டில்கள் கடத்தப்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் போலீசார், சீருடை இல்லாமல் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு மதுபாட்டில்களை கடத்தி வருபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை ஒருசில ஆசாமிகள் காவலர் போல தன்னை காண்பித்துக்கொண்டு சாலையில் வரும் வாகனங்களை சோதனைசெய்தவது போல மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்