ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மீது கடந்த மூன்று மாதங்களில் சுமார் 1,000 புகார்கள் வந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


3 மாதத்தில் 1,000 புகார்கள்:


மத்திய அரசு நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் டாடா நிறுவனம் கைப்பற்றியது. இதனையடுத்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 3 மாதங்களில் 1000 பயணிகளிடமிருந்து டாடா ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது புகார்கள் வரப்பெற்றுள்ளதாக மத்திய அரசு பதிலளித்துள்ளது. இதுகுறித்து, தகவல் தெரிவித்துள்ள மத்திய விமானத் துறை அமைச்சர் விகே சிங் கட்டணத்தை திரும்ப தருவது, விமான பயணச்சீட்டு அதிக முன்பதிவு, மற்றும் பணியாளர்களின் நடத்தை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஏர் இந்தியா மீது பயணிகள் புகார் அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார். 




அடிக்கடி பிரச்சனை:


இந்திய விமானத்துறை சமீப காலமாக பிரச்சனைகளை அடிக்கடி சந்தித்து வருகிறது. குறிப்பாக விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு பிரச்சனையை அதிகம் சந்தித்து வருகின்றன. கடந்த வாரத்தில் மட்டும் ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா, கோஏர் விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இரண்டு நாள்களுக்கு முன் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் இருந்து ஷார்ஜா சென்ற இண்டிகோ விமானம், கராச்சியில் தரையிறக்கப்பட்டது. 


விமான பயணிகள் புகார்கள் தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வி.கே.சிங், விமானப் பயணங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் மற்றும் மனக்குறைகளை விமானத்துறை அமைச்சகம்  பெற்றுவருவதாகவும், கட்டணத்தைத் திரும்பக் கொடுப்பது, விமானப் பிரச்சனைகள், பணியாளர்களின் நடத்தை, உடைமைகள் பிரச்சனை, ஓவர் புக்கிங் போன்ற பிரச்சனைகள் தான் அதிகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஏர் இந்தியா மீது கடந்த 3 மாதங்களில் அளிக்கப்பட்டுள்ள 1000 புகார்களும் இது தொடர்பாகவே உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.




முறைகேடான நடவடிக்கை:


சரியானப் பயணச்சீட்டு இருந்தும் பயணியை ஏற்ற மறுத்தது, அவர்களுக்கு சரியான இழப்பீடு வழங்காதது தொடர்பான புகாரில், கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது மத்திய விமானத்துறை அமைச்சகம். அதுமட்டுமல்லாமல், சரியான பயணச்சீட்டு இருந்தாலும், சரியான நேரத்திற்கு விமான நிலையம் வந்துவிட்டாலும் அவர்களை விமானத்தில் ஏற்ற்ற மறுப்பது போன்ற செயல்களை விமான நிறுவனங்கள் செய்து முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மத்திய வினான போக்குவரத்து இயக்குநரகம் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.